அஜித் குமார் மரண வழக்கு : அவிழும் முடிச்சுகள் ! யாரின் அழுத்தத்தில் நடந்தது ?

திருப்புவனத்தில் கோவில் காவலாளி அஜித் குமார் மரணத்திற்கு வழிவகுத்த நகை திருட்டு புகார் விசாரணை சம்பவம் தமிழகமெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், வழக்கின் விசாரணை பல முக்கிய முடிச்சுகளை அவிழ்த்துக்கொண்டு செல்கிறது.

ஜூன் 28-ஆம் தேதி, திருப்புவனத்தில் நகை திருட்டு புகாருக்கு பதிலளிக்க அழைக்கப்பட்ட அஜித் குமாரை, சீருடை அற்ற தனிப்படை போலீசார் தாக்கியதாக கூறப்படுகிறது. அதன்பிறகு, அவரது மரணம் நிகழ்ந்தது பெரும் கண்டனங்களை எழுப்பியது.

இந்தப் பின்னணியில், உயர்நீதிமன்ற மதுரை அமர்வு, வழக்கை மதுரை 4-வது கூடுதல் மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷிடம் விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. ஜூலை 2 முதல் 7ஆம் தேதி வரை அஜித்தின் குடும்பத்தினர், கோயில் பணியாளர்கள், பணிநீக்கம் செய்யப்பட்ட டிஎஸ்பி மற்றும் சம்பந்தப்பட்ட காவலர்களிடம் விசாரணை நடைபெற்றது. இதனையடுத்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

முதலில் சிபிசிஐடியிடம் மாற்றப்பட்ட இந்த வழக்கு, பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின் பேரில் சிபிஐக்கு மாற்றப்பட்டது. ஆகஸ்ட் 20க்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் சிபிஐக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சிபிஐ அதிகாரிகள் தற்போது விசாரணையை தீவிரமாக முன்னெடுத்து வருகிறார்கள். இதற்காக ஜூலை 1 முதல் 7ஆம் தேதி வரை மாநில போலீசாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணை ஆவணங்கள், வீடியோ ஆதாரங்கள் மற்றும் மருத்துவப் பரிசோதனை அறிக்கைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், சில முக்கிய கேள்விகள் சிபிஐ விசாரணையில் பதில் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக:

தொலைதூரத்தில் இருந்து சீருடையின்றி போலீசார் ஏன் வந்தனர்?

திருப்புவனம் காவல் நிலையத்தால் விசாரணை நடக்காமல், தனிப்படை போலீசார் ஏன் செயல்பட்டனர்?

இவை யாரின் அழுத்தத்தில் நடைபெற்றது?

மேலும், அஜித் குமாருக்கு எதிராக புகார் அளித்த நிகிதா என்பவர் மீது, ஏற்கனவே ரூ.16 லட்சம் மோசடி வழக்கு நிலுவையில் இருப்பதும் இப்போது முக்கிய விசாரணை அம்சமாக மாறியுள்ளது. 2011ஆம் ஆண்டு, பணம் வாங்கி வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக நிகிதாவுக்கு எதிராக FIR பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் முக்கிய ஆதாரமாக சிசிடிவி காட்சிகள் அமைந்திருக்கலாம் என கூறப்படுகிறது. போலீசாரின் நடவடிக்கைகளை அத்துடன் ஒப்பிட்டு, உண்மை வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version