ஜியோவைப் போலவே, ஏர்டெல் நிறுவனம் தனது பிரபலமான ரூ.249 ப்ரீபெய்ட் திட்டத்தை நிறுத்தியுள்ளது. ஒரு நாளுக்கு 1 ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்புகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட சலுகைகளுடன் 24 நாட்கள் செல்லுபடியாக இருந்த இந்த திட்டம், ஏர்டெல்லின் மலிவு விலை ரீசார்ஜ் திட்டங்களில் மிகவும் பயன்படுத்தப்பட்ட ஒன்றாகும்.
ஏர்டெல் தேங்க்ஸ் செயலியில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், ரூ.249 திட்டம் ஆகஸ்ட் 20, 2025, நள்ளிரவு 12 மணி (00:00 மணி) முதல் கிடைக்காது என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் குறுகிய காலத்திற்கு குறைந்த செலவில் சேவையை நாடிய வாடிக்கையாளர்கள் சிரமப்படுவார்கள் எனக் கூறப்படுகிறது.
தற்போது, நிறுத்தப்பட்ட திட்டத்திற்கு ஏர்டெல் நேரடி மாற்றீட்டை அறிவிக்கவில்லை. எனினும், வாடிக்கையாளர்களை நீண்ட காலம் செல்லுபடியாகும் அல்லது அதிக விலை கொண்ட ரீசார்ஜ் திட்டங்களுக்கு திசைதிருப்பும் முயற்சியாக இது கருதப்படுகிறது.
செயலிழப்பு: வாடிக்கையாளர்கள் சிக்கலில்
இதனுடன், திங்கள்கிழமை ஏர்டெல் சேவைகள் நாட்டின் பல பகுதிகளில் செயலிழந்தன. ‘டவுன்டெக்டர்’ இணையதளத்தின் படி, மாலை 4.30 மணியளவில் மட்டும் 3,500-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவாகின.
புகார் அளித்தவர்களில் 68% பேர் மொபைல் அழைப்புகளில் சிக்கல் இருந்ததாகவும், 16% பேர் மொபைல் இணைய பிரச்சினையைச் சந்தித்ததாகவும், 15% பேர் சிக்னல் இல்லை எனக் குறிப்பிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி, சண்டிகர், லக்னோ, பாட்னா, ஜெய்ப்பூர், இந்தூர், நாக்பூர், கொல்கத்தா உள்ளிட்ட பல நகரங்கள் செயலிழப்பு வரைபடத்தில் சிவப்பாகக் குறிக்கப்பட்டன. குறிப்பாக வட இந்தியா மற்றும் கிழக்கு இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் சேவை பாதிக்கப்பட்டது.