விராலிமலையில் 5000 நிர்வாகிகள் பங்கேற்ற அஇஅதிமுக மெகா ஆலோசனை கூட்டம்!

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், அஇஅதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது குறித்த எழுச்சிமிகு ஆலோசனைக் கூட்டம் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது. சுமார் 5000-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் திரண்டிருந்த இக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சரும், விராலிமலை சட்டமன்ற உறுப்பினருமான சி.விஜயபாஸ்கர் கலந்துகொண்டு தேர்தல் வியூகங்கள் குறித்து உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “அண்ணா திமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியானது மிகவும் வலிமையான, வளமான மற்றும் மகத்தான கூட்டணியாகும். இந்தக் கூட்டணி மக்களின் வாழ்க்கையை நிச்சயம் வளமாக்கும். விஜயபாஸ்கருக்குச் சோர்வு ஏற்பட்டுவிட்டதா? எனச் சிலர் வினவுகின்றனர்; அவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது ஒன்றுதான், முன்பை விட இன்னும் அதிக வேகத்துடனும், விசுவாசத்துடனும் விராலிமலை தொகுதிக்கும், அண்ணா திமுக பேரியக்கத்திற்கும் நான் என்றும் துணை நிற்பேன்” என்று ஆவேசமாகத் தெரிவித்தார்.

மேலும் தனது உரையில், “திருவிழாவாக இருந்தாலும், ஜல்லிக்கட்டாக இருந்தாலும் உங்களோடு கலந்து கொண்டு உங்கள் முகத்தைப் பார்ப்பதுதான் எனக்குப் பெருமகிழ்ச்சி. இதுதான் உங்களுக்கும் எனக்குமான பிரிக்க முடியாத பந்தம். இதை நீங்கள் குறித்து வைத்துக் கொள்ளுங்கள், இன்னும் இரண்டே மாதத்தில் நமக்கான ஆட்சி, நம்முடைய இரட்டை இலையின் ஆட்சி உறுதியாக வரும். நாம் ஆளுங்கட்சியாகப் பொறுப்பேற்போம், எடப்பாடியார் முதலமைச்சராகப் பதவியேற்பார். அவர் தலைமையில் ஆட்சி அமையும் போது, இந்தப் பகுதிக்குக் காவிரி நீரும் வரும், காவிரி ஆறும் வரும். விராலிமலைப் பகுதியை நெல்லும், கரும்பும், வாழையும், மஞ்சளும் விளையக்கூடிய செழிப்பான பூமியாக மாற்ற வேண்டும் என்பதே எனது ஆசை. காவிரி ஆற்றை வெட்டிக்கொண்டு வந்து புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமல்லாது, ஏழு மாவட்டங்களையும் வளமாக்க வேண்டும் என்பது எனது தலையாயக் கடமையாகும்” எனக் குறிப்பிட்டார்.

இந்த ஆலோசனை சங்கமத்தில் மாவட்ட அவைத் தலைவர் ராமசாமி, பிஜேபி மாவட்ட தலைவர் ராமச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் செ.பழனியாண்டி, நாகராஜ், திருமூர்த்தி, ஏவிஆர்.ராஜேந்திரன், ராமநாதன், முத்தமிழ்செல்வன், நகர செயலாளர் செந்தில் மற்றும் மாநில நிர்வாகிகள் எம்டிஆர்.தமிழரசன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் நெடுஞ்செழியன், நார்த்தாமலை ஆறுமுகம், ராஜு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் பழனிவேல், சுமன் காளிதாஸ், ராஜா மரியதாஸ், மகளிரணி அன்னலட்சுமி, மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் ஸ்ரீதர், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர்கள் முருகேசன், அய்யப்பன், மாவட்ட வர்த்தக அணி வெல்கம் மோகன், முன்னாள் ஊராட்சி மன்ற துணை தலைவர் தீபன் சக்கரவர்த்தி உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் விவசாய அணி முரளிதரன், வழக்கறிஞர் அணி ராஜோஸ்கண்ணா, கல்குடி அய்யப்பன், வீரமணி, பாசறை சுதாகர், ஒன்றிய துணை செயலாளர் பிரபாகரன், ஐடி விங் ரஞ்சித்குமார், டாக்டர் சரத்குமார், திருச்சி மண்டல செயலாளர் மணிகண்டன் எனத் திரளான அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சித் தொண்டர்கள் பங்கேற்றுத் தேர்தல் பணிகளில் ஈடுபட உறுதி ஏற்றனர்.

Exit mobile version