தமிழ்நாடு துணை முதலமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இன்று சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற அரசு மருத்துவமனை கட்டட திறப்பு விழாவில் அவர் கலந்து கொண்டார். அப்போது உரையாற்றிய அவர், “எடப்பாடி பழனிசாமி மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் அவர் நடுரோட்டில் பிரச்சாரம் மேற்கொண்டபோது, அந்த வழியாக வந்த ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. இதனை பொதுமக்களே எதிர்த்து பேசினர்.
ஆம்புலன்ஸ் வாகனங்களை நிறுத்தும் நிலைமைக்கு தள்ளிய எடப்பாடி பழனிசாமிக்கும் அவரது கட்சிக்கும் விரைவில் மக்கள் ஆம்புலன்ஸில் செல்லும் நிலையை ஏற்படுத்துவார்கள். விரைவில் உங்கள் இயக்கம் ஐசியுவில் அனுமதிக்கப்படும் நிலைக்கு வரும். ஆனால் அப்போது கூட உங்களை காப்பாற்றும் பொறுப்பை நமது முதலமைச்சர் ஏற்றுக்கொள்வார்” என உதயநிதி கூறினார்.
இதற்கிடையில், எடப்பாடி பழனிசாமி தனது பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட ஆம்புலன்ஸ் சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்டது என்றும், தனது பயணத்தை தடுக்கும் நோக்கில் ஆம்புலன்ஸ் அந்த வழியாக அனுப்பப்பட்டதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். மேலும், சில இடங்களில் அதிமுகவினரால் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் தாக்கப்பட்ட சம்பவமும் நடந்தது.
அதிமுகவில் ஏற்பட்டிருக்கும் உள்கட்சிச் சிக்கல்கள் தொடர்பாகவும் பரபரப்பு நிலவுகிறது. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கட்சியை ஒருங்கிணைக்க வேண்டும் என வலியுறுத்தியதையடுத்து, அவரை பதவிகளில் இருந்து நீக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அவர் தனி அணியாக செயல்படுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் அதிமுக உரிமைக்காக களம் இறங்கியுள்ள நிலையில், செங்கோட்டையனும் புதிய பிரிவாக உருவாகுவாரா என்ற விவாதம் தொடர்கிறது.
இந்த சூழ்நிலையில்தான் உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமியை குறிவைத்து தனது கடுமையான விமர்சனத்தை பதிவு செய்துள்ளார்.

















