புதுக்கோட்டை அருகே அமைந்துள்ள புஷ்கரம் வேளாண்மை அறிவியல் கல்லூரியின் நான்காம் ஆண்டு பட்டமளிப்பு விழா, கல்லூரி வளாகத்தில் நேற்று மிகச்சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்குப் புதுடெல்லி இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் முன்னாள் துணைத் தலைமை இயக்குநர் (கல்வித்துறை) ஆர்.சி. அகர்வால் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, இளம் வேளாண் பட்டதாரிகளுக்குப் பட்டங்களை வழங்கி சிறப்பித்தார். புஷ்கரம் வேளாண்மை அறிவியல் கல்லூரி மற்றும் திண்டுக்கல் ஜி.டி.என். கல்விக் குழுமத்தின் தலைவர் ரத்தினம் அவர்களின் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற இந்த விழாவில், கல்லூரியின் நிர்வாக இயக்குநர் ஆர்.துரை, நிர்வாக இணை இயக்குநர் கே.கே.ஆர். வெங்கடேஷ், நிதி ஆலோசகர் சிவராஜன் மற்றும் வளாக மேலாளர் நெப்போலியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் மொத்தம் 112 மாணவ-மாணவியர்களுக்கு இளங்கலை வேளாண் பட்டங்கள் வழங்கப்பட்டன.
மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கிப் பாராட்டிய சிறப்பு விருந்தினர் ஆர்.சி. அகர்வால் பேசுகையில், தற்போதைய சூழலில் நிலவும் காலநிலை மாற்றம், இயற்கை வள மேலாண்மை மற்றும் தாவரப் பன்முகத்தன்மை ஆகியவை மிக முக்கியமான சுற்றுச்சூழல் கவலைகளாக உருவெடுத்துள்ளன என்று குறிப்பிட்டார். அதேவேளையில், செயற்கை நுண்ணறிவு (AI), மேம்பட்ட வேளாண் தொழில்நுட்பம், ஒருங்கிணைந்த பண்ணை முறை மற்றும் நவீன இயற்கை விவசாய முறைகள் மூலம் மட்டுமே நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என்று அவர் வலியுறுத்தினார். நவீன உலகில் வேளாண் பட்டதாரிகள் இத்தகைய சவால்களை எதிர்கொள்ளத் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சுப்பையா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, மாணவர்களின் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் உரையாற்றினார். முன்னதாக, கல்லூரியின் முதல்வர் சுவாமிநாதன் இரகுராமன் வரவேற்புரையாற்றி விழாவை ஒருங்கிணைத்தார். இந்நிகழ்ச்சியில் கல்லூரி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், புல முதல்வர்கள் மற்றும் பெற்றோர்கள் திரளாகக் கலந்துகொண்டு புதிய பட்டதாரிகளை வாழ்த்தினர்.
