சென்னை :
அதிமுக பொதுச் செயலாளர் மற்றும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில், அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைக் கழகத்தில் காலை 10.30 மணிக்கு தொடங்கும் இக்கூட்டத்தில், மாநிலம் முழுவதிலுமிருந்து மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்கின்றனர்.
அடுத்தாண்டு நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, கட்சித் திட்டங்கள், தேர்தல் பிரசாரத்திட்டங்கள் உள்ளிட்ட முக்கிய விவாதங்கள் இக்கூட்டத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே ஜூலை மாதத்தில் தேர்தல் பிரசாரப் பயணத்தை தொடங்கிய எடப்பாடி பழனிசாமி, மூன்று கட்டங்களை நிறைவு செய்துள்ளார். வரும் செப்டம்பர் 1ஆம் தேதி நான்காவது கட்ட சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ள நிலையில், இன்றைய கூட்டம் நடைபெறுகிறது.
இதுகுறித்து அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்ட அறிக்கையில்,
“அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், ஆகஸ்ட் 30ஆம் தேதி காலை 10.30 மணிக்கு மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும். இதில் மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.