சென்னை :
ஆள் கடத்தல் வழக்கில் தமிழக ஆயுதப்படை பிரிவு கூடுதல் டிஜிபி (ADGP) ஹெச்.எம். ஜெயராமை போலீசார் நேற்று கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
இந்த வழக்கு, காதல் திருமணம் செய்த ஒரு ஜோடியை பிரிக்கும் நோக்கத்தில், காதலனின் தம்பியான சிறுவனை கடத்திய சம்பவத்தைத் தொடர்புடையதாகும். இதில் புரட்சி பாரதம் கட்சி தலைவர் மற்றும் கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏ.வான பூவை ஜெகன்மூர்த்தி மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன.
வீட்டில் போலீஸ் சோதனை – மாயமான எம்.எல்.ஏ.
இந்த வழக்கை தொடர்ந்து, திருவள்ளூர் எஸ்.பி. தலைமையிலான போலீசார் ஜூன் 14 ஆம் தேதி பூவை ஜெகன்மூர்த்தியின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர். ஆனால் அப்போது அவரது ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு போலீசாருக்கு தடை செய்தனர். இதைத் தொடர்ந்து ஜெகன்மூர்த்தி தலைமறைவானார்.
மேலும், அவர் ஐகோர்ட்டில் முன்ஜாமின் கோரிக்கையைச் செய்திருந்தார்.
உயர்நீதிமன்ற உத்தரவுகள்
இந்நிலையில், இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி வேல்முருகன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. நீதிமன்றத்தில் போலீஸ் தரப்பில், ஜெயராமின் மீதும் சந்தேகம் இருப்பதால் அவரையும் விசாரிக்க வேண்டும் என தெரிவித்தனர்.
இதையடுத்து, ஜெயராம் மற்றும் எம்.எல்.ஏ. ஜெகன்மூர்த்தி இருவரும் ஜூன் 16 ஆம் தேதி மதியம் 2.30 மணிக்கு நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டது.
அந்த உத்தரவுப்படி, இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். விசாரணையை தொடர்ந்து, நீதிபதி வேல்முருகன், ஜெயராமை கைது செய்து காவலில் வைக்க உத்தரவிட்டார்.
நீதிபதியின் கடுமையான எச்சரிக்கை
வழக்கின் விசாரணையில் நீதிபதி, எம்.எல்.ஏ. பூவை ஜெகன்மூர்த்திக்கு கடுமையான கேள்விகளை எழுப்பினார். “200 பேரும் ஒன்று சேர்ந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம். நீதிமன்றம் விரும்பினால் 10 நிமிடத்தில் உங்களை கைது செய்து உள்ளே போட முடியும்” என எச்சரித்தார்.
மேலும், “விசாரணைக்கு ஒத்துழையுங்கள். உங்களை மக்கள் சட்டமன்றத்திற்கு கட்டப்பஞ்சாயத்து செய்ய அனுப்பவில்லை. தனியாக வரவேண்டும்” என நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.
வழக்கு ஒத்திவைப்பு
இந்த வழக்கு ஜூன் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதற்கிடையில், ஜெயராமை கைது செய்து விசாரணைக்கு போலீசார் அழைத்துச் சென்றனர்.
ஜெயராம் யார் ?
காவல்துறை உயர் அதிகாரியாகப் பணியாற்றும் ஹெச்.எம். ஜெயராம், கர்நாடகாவைச் சேர்ந்தவர். தனது பணியை கோவையில் தொடங்கி, தர்மபுரி, நாமக்கல் மாவட்டங்களில் எஸ்.பி.,யாகவும், கோவை, வேலூர், தஞ்சையில் டி.ஐ.ஜி., மற்றும் திருச்சியில் ஐ.ஜி., ஆகவும் பதவி வகித்துள்ளார். சென்னை வடக்கு கூடுதல் கமிஷனராகவும், தமிழ்நாடு போலீஸ் அகாடமியிலும் பணியாற்றிய அனுபவமுள்ளவர்.