சென்னை : சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு மதுபான பாரில் சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட மோதல் சம்பவம், தற்போது போதைப்பொருள் வழக்காக மாறியுள்ளது. இந்த வழக்கில் நடிகர் கிருஷ்ணா கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிகழ்வில் தொடக்கமாக, இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் மதுபான பார் மேலாளர் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் இருதரப்பினர்மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்து, கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இந்த வழக்கில், ஓட்டல் உரிமையாளர் தூண்டில் ராஜாவுக்கு ஆதரவாக அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத், நடிகர் அஜய் வாண்டையார் உள்ளிட்டோர் காவல் நிலையத்தில் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அவர்களும் பின்னர் கைது செய்யப்பட்டனர்.
பண மோசடி மற்றும் குண்டர் சட்டம் :
விசாரணையின் போது, பிரசாத் மற்றும் அஜய் வாண்டையார் ஆகியோர் பலரிடம் வேலை வாங்கித் தரும் பெயரில், குறைந்த விலையில் கார் மற்றும் நிலங்களை வாங்கித் தருவதாக கூறி, கோடிக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதன் அடிப்படையில் அவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
போதைப்பொருள் தொடர்பு கண்டுபிடிப்பு :
பிரசாத் மற்றும் அவரது சுற்றியுள்ளவர்களின் வங்கி கணக்குகள் மற்றும் செல்பேசி பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தபோது, போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்புகள் இருப்பது உறுதியானது. இதன் தொடர்ச்சியாக சேலத்தைச் சேர்ந்த பிரதீப் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து கொக்கைன் வகை போதைப்பொருளும் பறிமுதல் செய்யப்பட்டது. பிரதீப் அளித்த தகவலின் அடிப்படையில், போதைப்பொருள் கடத்தலில் முக்கிய பங்கு வகித்த ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த ஜான் என்பவரும் கைது செய்யப்பட்டார்.
நடிகர்கள் தொடர்பில் விசாரணை தீவிரம் :
நடந்த விசாரணையில், பிரதீப்பிடம் இருந்து கடந்த 3 வருடங்களாக போதைப்பொருள் வாங்கி நடிகர் ஸ்ரீகாந்த் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதன் பேரில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டார். விசாரணையின் போது, நடிகர் கிருஷ்ணா உடன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக அவர் வாக்குமூலம் அளித்ததாக தகவல்.
போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் கிருஷ்ணா கைது :
அதன்பேரில் போலீஸார் நடிகர் கிருஷ்ணாவை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினர். . அதன்பேரில் நேற்று மதியம் நடிகர் கிருஷ்ணா தனது வழக்கறிஞர்களுடன் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரானார். இதையடுத்து அவரிடம் 24 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்திய போலீசார், அவரை கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் நடிகர் ஸ்ரீகாந்த் உடன் போதைப்பொருள் பயன்படுத்தியது குறித்தும், போதைப்பொருள் விற்பனை செய்யும் கும்பலுடன் உள்ள தொடர்பு குறித்துட’ விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.