மயிலாடுதுறை மாவட்டம் கப்பூர் கிராமத்தில் போதிய தண்ணீர் இல்லாமல் 300-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் சம்பா பயிர்கள் காய்ந்து வருகின்றன, காய்ந்த பயிரை கையில் ஏந்தி வயல்வெளியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் :-
மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பாண்டு சுமார் ஒரு லட்சத்து 71 ஆயிரம் ஏக்கர் பரப்பளில் நடவு, நேரடி நெல் விதைப்பு, திருந்திய நெல் சாகுபடி முறையில் சம்பா,தாளடி சாகுபடிக்கு ஏற்ற நெல் ரகங்களை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். தற்பொழுது பெரும்பாலான இடங்களில் சம்பா அறுவடை பணிகள் துவங்கி உள்ள நிலையில், குத்தாலம் தாலுக்கா மங்கைநல்லூர் அருகே கப்பூர் கிராமத்தில் வீரசோழன் ஆற்றின் பாசனத்தை நம்பி 500க்கும் மேற்பட்ட ஏக்கர் விலை நிலங்கள் உள்ளன. இங்கு ஆற்றுப் பாசனத்தை மட்டும் நம்பியுள்ள நிலையில், குறுவை சாகுபடி கைவிட்ட நிலையில், ஒருபோக சம்பா சாகுபடி மட்டுமே இவர்கள் வாழ்வாதாரமாக உள்ளது. வீரசோழன் ஆற்றில் இருந்து அண்ணாமலை வாய்க்கால் மூலம் இங்குள்ள வயல்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. மேட்டூர் அணையில் பாசனத்திற்காக தண்ணீர் நிறுத்தப்பட்ட நிலையில், இப்பகுதியில் பயிர்களுக்கு போதிய தண்ணீர் இன்றி வயல்கள் காய்ந்து காணப்படுகின்றன. தற்பொழுது சம்பா பயிரில் கதிர்கள் வர துவங்கிய நிலையில் தண்ணீர் தேவை அதிகரித்துள்ளது. தண்ணீர் இல்லாத காரணத்தால் வயல்கள் பாலம் பாலமாக வெடித்து, பயிர்கள் காயத் துவங்கி உள்ளன. ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்துள்ள விவசாயிகள் இதனால் பெரும் வேதனை அடைந்துள்ளனர். பருவ மழை நிறைவடைந்த நிலையில் கடும் பனிப்பொழிவு காரணமாகவும் பூச்சி நோய் தாக்குதல் அதிகரித்துள்ள நிலையில் தண்ணீர் பிரச்சனையால் 500 ஏக்கர் நிலத்தை நம்பி உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. உடனடியாக வீரசோழன் ஆற்றில் இருந்து கருகும் பயிர்களை காப்பாற்ற தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை வலியுறுத்தி காய்ந்த பயிர்களை கையில் ஏந்தி வயல்களுக்கு நடுவே நின்று விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
