டிட்வா புயல் சின்னம் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. சராசரிக்கும் அதிகமான வேகத்தில் காற்று வீசி வரும் நிலையில், மழை காரணமாக மயிலாடுதுறை அருகே கீழபட்டமங்கலம் ஊராட்சி வடக்கு தெருவில் உள்ள பொன்னுசாமி என்பவர் ஒரு வீட்டில் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது. இந்த சுவர் அருகிலுள்ள வரதராஜன் என்பவரது குடிசை வீட்டின் மேல் விழுந்ததில் வரதராஜன் வீட்டின் சுவரும் இடிந்து சேதம் அடைந்தது. சுவற்றின் அருகே உட்கார்ந்து இருந்த வரதராஜனின் மனைவி காந்திமதி என்பவர் மேல் சுவர் இடிந்து விழுந்தது. இதில் காயமடைந்த காந்திமதி மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.















