சமூகத்தில் மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள திருநங்கை சமூகத்தினரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அவர்களுக்கான சட்டப்பூர்வ உரிமைகளை உறுதிப்படுத்தவும் கோவையில் முக்கியமான முன்னெடுப்பு ஒன்று எடுக்கப்பட்டுள்ளது. கோவை ஹிந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சமூகப் பணியியல் துறை, இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய சமூக பாதுகாப்பு நிறுவனத்துடன் (NISD) இணைந்து, “திருநங்கை நபர்களின் உரிமைகள் பாதுகாப்புச் சட்டம்-2019 மற்றும் விதிகள்-2020” குறித்த இருநாள் பயிற்சியாளர் பயிற்சி (Training of Trainers) நிகழ்ச்சியை மிகச்சிறப்பாக நடத்தியது.
ஜனவரி 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு முகாம், திருநங்கையர் சந்திக்கும் சமூகப் பிரச்சனைகளுக்குச் சட்ட ரீதியான தீர்வுகளைக் காண்பதை நோக்கமாகக் கொண்டு தொடங்கப்பட்டது. விழாவின் தொடக்க நிகழ்வில் கல்லூரி முதல்வர் பொன்னுசாமி அனைவரையும் வரவேற்றுப் பேசினார். அப்போது, கல்வி நிறுவனங்கள் இத்தகைய சமூக அக்கறை கொண்ட விவாதங்களைத் முன்னெடுப்பதன் மூலம் மட்டுமே வருங்காலத் தலைமுறையினரிடையே திருநங்கையர் குறித்த நேர்மறையான மாற்றத்தை உருவாக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.
சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற கோவை நேட்டிவ் மெடிகேர் சாரிடபிள் டிரஸ்ட் (NMCT) நிறுவனத்தின் மேலாண்மை அறங்காவலர் ஏ.எஸ். சங்கரநாராயணன், திருநங்கையர் எதிர்கொள்ளும் சுகாதாரச் சிக்கல்கள் மற்றும் சட்ட ரீதியான சவால்கள் குறித்து விரிவான உரையை வழங்கினார். “திருநங்கையர் உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் என்பது வெறும் காகிதத்தோடு நின்றுவிடாமல், அது அடித்தட்டு மக்களையும் சென்றடைய வேண்டும். குறிப்பாக, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் மருத்துவமனைகளில் அவர்கள் பாகுபாடின்றி நடத்தப்படுவதை உறுதி செய்வதே இந்தச் சட்டத்தின் உண்மையான வெற்றி” என்று அவர் வலியுறுத்தினார்.
இந்த இருநாள் பயிற்சியில் கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செயல்படும் பல்வேறு அரசு சாரா அமைப்புகள் (NGOs), தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் உற்சாகமாகப் பங்கேற்றனர். இவர்களுக்குப் பயிற்சியாளர்களாகச் செயல்படும் நோக்கில் சட்ட நுணுக்கங்களும், திருநங்கையர் நல வாரியத்தின் திட்டங்களும் விளக்கிக் கூறப்பட்டன. நிகழ்ச்சியின் நிறைவாக, சமூகப் பணியியல் துறைத் தலைவரும் பேராசிரியருமான எம். புனிதா நன்றி கூறினார். இத்தகைய உயர்மட்டப் பயிற்சிகள் மூலம், கோவை மாவட்டத்தில் திருநங்கையர் நலன் சார்ந்த திட்டங்களைச் செயல்படுத்துவதில் புதிய உத்வேகம் பிறந்துள்ளதாகப் பங்கேற்பாளர்கள் தெரிவித்தனர்.

















