“விஜய் தலைமையில் ஒரு அணி அமையும்” – டிடிவி தினகரன்

2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், தமிழக அரசியல் சூழல் சூடுபிடித்து வருகிறது. ஆளும் திமுக கூட்டணியில் எந்த சலசலப்பும் இல்லாத நிலையில், எதிர்க்கட்சிகள் தங்களது கூட்டணிகளை உறுதிப்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில், நடிகர் விஜய் தொடங்கிய தவெக கட்சி எந்தளவு கட்டமைப்பை பெறப்போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளதோடு, அவரைச் சுற்றி கூட்டணி அமையுமா என்ற ஆர்வமும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “சட்டமன்றத் தேர்தலின் போது விஜய் தலைமையில் ஒரு அணி அமையும்” என்று தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மேற்கு மாவட்ட பரமக்குடி சட்டமன்றத் தொகுதி கழக செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“2024 நாடாளுமன்றத் தேர்தலில் நிபந்தனையின்றி பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவு தெரிவித்தோம். ஆனால் தற்போது நாங்கள் என்டிஏ கூட்டணியில் உள்ளோமா இல்லையா என்பது குறித்து நயினார் நாகேந்திரன் சொல்ல வேண்டும்” என்றார்.

முதல்வர் மு.க. ஸ்டாலினின் வெளிநாட்டு பயணம் குறித்து கேட்கப்பட்டபோது, “கத்திரிக்காய் முற்றியவுடன் சந்தைக்கு வரும். அதுபோல இதையும் பொறுத்திருந்து பார்ப்போம்” என்று அவர் பதிலளித்தார்.

சசிகலா வலியுறுத்திய ஒன்றிணைவு குறித்து தினகரன்,
“அம்மாவின் தொண்டர்கள் ஓரணியில் இணைய வேண்டும் என்பது எங்கள் நிலைப்பாடு. ஆனால் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் வேறு எந்தக் கட்சியிலும் இணைவதில்லை” எனத் தெளிவுபடுத்தினார்.

மேலும் அவர், “சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி, என்டிஏ கூட்டணி, சீமான் தலைமையிலான தனித்தனி அணிகள் போட்டியிடுகின்றன. அதேபோல் விஜய் தலைமையிலும் ஒரு அணி அமையும். எங்களின் கூட்டணி நிலைப்பாடு குறித்து டிசம்பரில் அறிவிக்கப்படும்” எனவும் கூறினார்.

Exit mobile version