கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தனியார் கல்லூரி சுயநிதி பிரிவு பேராசிரியர்களுக்கு 3 மாதமாக சம்பளம் வழங்காததை கண்டித்து கல்லூரி வளாகத்தில் அலுவலக வாசல் முன் அமர்ந்து பேராசிரியர்கள் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் சி.எஸ்.ஐ., பேராலயத்தால் நிர்வகிக்கப்படும் தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு சுயநிதி பிரிவில் 68 பேராசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு கடந்த 3 மாதங்களாக கல்லூரி நிர்வாகம் சம்பளம் வழங்காமல் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட பேராசிரியர்கள் இன்று கல்லூரி வளாகத்தில் அலுவலக வாசல் முன்பு அமர்ந்து தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக கல்லூரி நிர்வாகம் பல்வேறு நிர்வாக காரணங்களை சுட்டிக்காட்டி சம்பளம் வழங்காமல் இழுத்தடித்து வருவதாகவும் இவ்வாறு சம்பளம் வழங்காமல் இருந்தாலும் மாணவர்களின் நலன் கருதி வகுப்புகளை புறக்கணிக்காமல் இடைவேளை நேரங்களில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் கூறினர். 3 மாதம் வழங்குதல் உள்ள சம்பள பணம் கேட்டு நடைபெறும் பேராசிரியர் களின் உள்ளிருப்பு போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
