மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த 2026-27 நிதியாண்டிற்கான மத்திய நிதிநிலை அறிக்கையானது, ‘வளர்ச்சியடைந்த பாரதம்’ எனும் இந்தியாவின் உன்னத இலக்கை எளிதில் எட்டிப்பிடிக்க உதவும் ஒரு வலுவான ஆவணமாக அமைந்துள்ளது என அமம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மனமாரப் பாராட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையில், பிரதமர் நரேந்திர மோடியின் சீரிய தலைமையில் 9-வது முறையாகப் பட்ஜெட் தாக்கல் செய்து, அதிக முறை நிதிநிலை அறிக்கையைச் சமர்ப்பித்த நிதியமைச்சர்களின் பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ள நிர்மலா சீதாராமனுக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். ‘அனைவருக்குமான வளர்ச்சி’ எனும் கோட்பாட்டை முன்னிறுத்தித் தயாரிக்கப்பட்டுள்ள இந்த பட்ஜெட்டில், தமிழகத்தின் கலாச்சாரம் மற்றும் உள்கட்டமைப்பை மேம்படுத்தப் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, தமிழகத்தின் தொன்மையான ஆதிச்சநல்லூர் உலகத்தரம் வாய்ந்த சுற்றுலாத் தளமாக மாற்றப்படும் என்றும், அங்கு தமிழர்களின் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் வகையில் கலாச்சார மையம் அமைக்கப்படும் என்ற அறிவிப்புக்கும் அவர் வரவேற்பு தெரிவித்துள்ளார். மேலும், சென்னை – ஐதராபாத் மற்றும் சென்னை – பெங்களூரு இடையேயான அதிவேக ரயில் வழித்தடங்கள், பழவேற்காடு ஏரியில் பறவைகளைக் காணப் பிரத்யேகக் காட்சி மையம், பொதிகை மலையில் மலையேற்றத் திட்டம் எனத் தமிழகத்திற்கான பிரத்யேக அறிவிப்புகளை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வேளாண்மைத் துறையில் தேங்காய், முந்திரி மற்றும் கோகோ உற்பத்தியில் தன்னிறைவு அடைய அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள், மத்திய அரசின் விவசாய அக்கறையை வெளிப்படுத்துவதாகத் தெரிவித்துள்ள அவர், உயர்கல்வி மற்றும் பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டந்தோறும் பெண்கள் விடுதிகள் மற்றும் 15 ஆயிரம் பள்ளிகளில் உருவாக்கப்படவுள்ள AVGC படைப்பாற்றல் ஆய்வகங்களையும் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
தொழில் மற்றும் மருத்துவத் துறைகளில் இந்த பட்ஜெட் புதிய உத்வேகத்தைத் தரும் எனக் குறிப்பிட்டுள்ள டிடிவி தினகரன், MSME நிறுவனங்களுக்கான 10 ஆயிரம் கோடி ரூபாய் வளர்ச்சி நிதி மற்றும் மருத்துவத்துறையில் 17 வகையான உயிர் காக்கும் மருந்துகளுக்குச் சுங்க வரி விலக்கு அளிக்கப்பட்டிருப்பதை வரவேற்றுள்ளார். தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றம் இல்லாதது சற்று ஏமாற்றம் அளித்தாலும், ஐடி ரிட்டன் நடைமுறை எளிமையாக்கப்பட்டு இருப்பதும், மார்ச் 31 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு இருப்பதும் சற்று ஆறுதல் தருவதாகக் கூறியுள்ளார். அதேநேரம், தமிழக மக்கள் ஆவலோடு எதிர்பார்த்த மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்டங்கள் மற்றும் புதிய ஐஐடி குறித்த அறிவிப்புகள் இடம் பெறாதது வருத்தம் அளிப்பதாகக் குறிப்பிட்ட அவர், ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் பாரம்பரியத் தொழில்களுக்குப் புத்துயிர் அளித்து, நாட்டின் பொருளாதாரத்தை நிலைத்தன்மையுடன் கொண்டு செல்ல இந்த நிதிநிலை அறிக்கை ஒரு சிறந்த அடித்தளமாக இருக்கும் எனத் தனது அறிக்கையில் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.













