மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் நாகராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில பொறுப்பாளர் சக்திவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில் தூய்மை காவலர்களின் மாத ஊதியத்தை ரூ.10,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும், மக்கள் நல பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு காலமுறை ஊதியத்தை, காலமுறை ஊதியமாக நிர்ணயித்து பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஊராட்சி செயலர்களை தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைத்து, ஊராட்சி ஒன்றிய பதிவறை எழுத்தருக்கு பொருந்தும் அனைத்து சலுகைகளையும் வழங்க வேண்டும், கணினி உதவியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் தூய்மை காவலர்கள், மக்கள் நல பணியாளர்கள், மேல்நிலை நீர் தேக்க தொட்டி இயக்குபவர்கள், ஊராட்சி செயலர்கள், கணினி உதவியாளர்கள் உள்ளிட்ட ஊரக வளர்ச்சித் துறையின் அனைத்து சங்கங்களை சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

















