சீர்காழி அருகே காத்திருப்பு கிராமத்தில் மழை, காற்றால் இடிந்து சிதைந்த சிறிய குடிசையில் இருப்பிடம் இன்றி பெண், பேத்திகளுடன் பரிதவித்த மூதாட்டி.
ரூபாய் 3 லட்சம் மதிப்பீட்டில் 20 நாளில் பாதுகாப்பான வீடு கட்டிக் கொடுத்த சமூக சேவகர். திறப்பு விழா செய்து புத்தாடை மற்றும் மளிகை பொருட்களை வழங்கிய சமூக ஆர்வலருக்கு மூதாட்டியின் குடும்பம் மற்றும் கிராம மக்கள் பாராட்டு.
ஒரு மனிதனுக்கு இன்றி அமையாதவை உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடம், இந்த மூன்றில் உணவு மற்றும் உடை ஆகிவற்றை விழும்பு நிலையில் உள்ள மக்களால் தங்கள் உழைப்பினால் பெற முடியும், ஆனால் விழும்பு நிலை சாதாரண பாமர மக்களால் பெரும் கனவாக இருப்பது இருப்பிடம். அந்த வசிப்பிடத்தையும் தங்களது உழைப்பின் மூலம் ஒரு குருவிக்கூடு போல் அமைத்தாலும் இயற்கை பேரிடர் போன்றவற்றால் அந்த சிறிய வீடும் சிதைந்து விடும் நிலை ஏற்படுகிறது. இதனால் அவர்களது வாழ்வாதாரமும் முற்றிலும் பாதிக்கப்படுகிறது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே காத்திருப்பு கிராமத்தை சேர்ந்தவர் தில்லையம்மாள் (65) தனது மகள் மற்றும் இரண்டு பேர்த்திகளுடன் சேதம் அடைந்திருந்த குடிசை வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு பெய்த கனமழை மற்றும் காற்றில் அந்த குடிசை வீடு முற்றிலும் சரிந்து விழுந்து பாதிப்பு ஏற்பட்டது இதனால் மன வேதனை அடைந்த மூதாட்டி தார்ப்பாய் அமைத்து சிறிய குடிலில் வசித்து வந்தார். மகள் மற்றும் இரண்டு பேத்திகளை வைத்துக்கொண்டு வீட்டில் அமரக்கூட இடம் இடமில்லாமல் பாதுகாப்பற்ற நிலையில் மிகுந்த சிரமத்துடன் வசித்தார். விவசாயக் கூலி வேலைக்கு செல்லும் மூதாட்டியால் வீட்டை சீரமைக்க முடியாத வறுமை நிலை குறித்து கிராம மக்கள் மூலம் அறிந்த பெரம்பூர் பகுதியை சேர்ந்த சமூக சேவகர் பாரதிமோகன், மூதாட்டிக்கு உதவிட முன்வந்தார். மூதாட்டியின் வீட்டின் அருகில் உள்ள இடத்தில்
பாரதிமோகன் தனது நண்பர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் உதவியுடன் ருபாய் 3 லட்சம் மதிப்பில் பாதுகாப்பான வீடு கட்டும் பணி கடந்த மாதம் துவங்கப்பட்டது. அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் கட்டி முடிக்கப்பட்ட வீட்டை மூதாட்டியை வைத்து திறப்பு விழா செய்து இன்று அவர்களிடம் ஒப்படைத்தார்.மூதாட்டி மற்றும் அவரது மகள் மற்றும் பேத்திகளுக்கு புத்தாடைகள் அணிவித்து, மளிகை பொருட்களையும் வழங்கினார். விழாவிற்கு தேவையான காலை உணவுகளையும் தயார் செய்து சமூக சேவகர் விழா தொடர்ந்து கிராம மக்கள் அனைவருக்கும் விருந்து அளிக்கப்பட்டது.
விழாவில் கிராம மக்கள், சமூக ஆர்வலர்கள்,மற்றும் பலர் கலந்து கொண்டனர். மூதாட்டிக்கு குடும்பத்தினருக்கு சமூக வலைதள நண்பர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் உதவியோடு பாதுகாப்பான வீடு கட்டிக் கொடுத்த சமூக ஆர்வலர் பாரதி மோகனுக்கு கிராம மக்கள் மற்றும் மூதாட்டி குடும்பத்தினர் பாராட்டு தெரிவித்தனர்.
இது குறித்து சமூக சேவகர் பாரதிமோகன் கூறுகையில் இந்த உலகத்தில் நாம் மனிதர்களாக பிறந்தோம், மனிதர்களாகவே வாழ்கிறோம், நாம் போகும்போது பணம் பொருள் உடல் உயிர் அனைத்தையும் கொண்டு போவதில்லை, மனிதப் பிறவியில் மறுபிறவி உண்டா,, கிடையாது, ஆகையால் மனிதர்களாக நாம் பிறக்கும் போது இதுபோன்ற தாய் உள்ளத்தோடு கஷ்டப்படுற மக்களுக்கும் ஏழை எளிய மக்களுக்கும் வாயில்லாத ஜீவனுக்கும் நம்மால் முடிந்த சிறு உதவியை செய்வோம். இதை நான் தாரக மந்திரமாக எடுத்துக்கொண்டு இந்த மூதாட்டியை வந்து நான் பார்க்கும்போது இந்த 2025ம் ஆண்டில் இப்படியும் மனிதர்கள் வாழ்கிறார்களா என்று கண்ணீர் விட்டேன். இரண்டு பெண் பேரப்பிள்ளைகளை வைத்துக்கொண்டு மூதாட்டி இடிந்த குடிசையில் வாழ்ந்தது மன வேதனையை அளித்தது. மூதாட்டியின் நிலைமையை அறிந்து சமூக வலைதளங்கள் மூலம் நண்பர்கள் உதவியோடு ரூபாய் மூன்று லட்சம் மதிப்பீட்டில் 20 நாளில் இந்த வீடு கட்டிக் கொடுத்து மூதாட்டியின் கைகளில் வீட்டை ஒப்படைத்தேன். அப்போது அவர்கள் பட்ட துன்பமெல்லாம் போய் மன நிம்மதியோடு சந்தோஷமாக இருந்ததை கண்டு நான் மகிழ்ந்தேன். ஆகையால் மனிதர்களாக பிறந்த நாமும் இரக்ககுணம் படைத்து கஷ்டப்படுற மக்களுக்கு வாயிலாத ஜீவனுக்கும் உதவி புரியவேண்டும் என்று கூறினார்.


















