சிறுமுகையில் 1000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற பிரம்மாண்ட சாலை பாதுகாப்பு பேரணி  

தமிழக அரசுப் போக்குவரத்துத் துறை சார்பில் மாநிலம் முழுவதும் ‘தேசிய சாலை பாதுகாப்பு மாதம்’ கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. சாலை விபத்துக்களைக் குறைக்கவும், போக்குவரத்து விதிகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவும் பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, மேட்டுப்பாளையம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில், சிறுமுகை பகுதியில் பிரம்மாண்ட சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. மேட்டுப்பாளையம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சத்தியகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சாலை விதிகளைப் பின்பற்றுவதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

சிறுமுகை தியேட்டர் மேடு பகுதியில் தொடங்கிய இந்தப் பேரணியைச் சிறுமுகை போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பிகா கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். சிறுமுகை விஜயலட்சுமி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி தாளாளர் தம்பு முன்னிலை வகித்தார். இந்தப் பேரணியில் கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன் மற்றும் மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்னகாமணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். அப்போது அவர்கள் பேசுகையில், “தலைக்கவசம் அணிவது, சீட் பெல்ட் அணிவது மற்றும் அதிவேகத்தைத் தவிர்ப்பது போன்ற அடிப்படை விதிகளைப் பின்பற்றுவதன் மூலம் விலைமதிப்பற்ற உயிர்களைக் காக்க முடியும்; ஒவ்வொரு ஓட்டுநரும் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும்” என வலியுறுத்தினர்.

இந்தப் பேரணியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகப் பணியாளர்கள், தனியார் பள்ளிப் பேருந்து ஓட்டுநர்கள், ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி உரிமையாளர்கள், ஆட்டோ மற்றும் டெம்போ ஓட்டுநர்கள் சங்கத்தினர் எனப் பல்வேறு தரப்பினர் கலந்துகொண்டனர். குறிப்பாக, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கையில் விழிப்புணர்வுப் பதாகைகளை ஏந்தி, கோஷங்களை எழுப்பியபடி 1000-க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாகச் சென்றனர். தியேட்டர் மேட்டில் தொடங்கிய இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று விஜயலட்சுமி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியை அடைந்தது.

அங்கு நடைபெற்ற விழிப்புணர்வு முகாமில், மாணவர்களுக்கும் ஓட்டுநர்களுக்கும் சாலைப் பாதுகாப்பு குறித்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும், பாதுகாப்பான வாகனம் ஓட்டுதல் குறித்த செய்முறை விளக்கங்களும் அளிக்கப்பட்டன. வளர்ந்து வரும் வாகனப் பெருக்கத்திற்கு ஏற்ப, ஓட்டுநர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது விபத்துக்களைக் குறைக்க உதவும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த பிரம்மாண்ட பேரணியானது சிறுமுகை மற்றும் மேட்டுப்பாளையம் பகுதி பொதுமக்களிடையே பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version