கோபால்பட்டியில் அடிப்படை வசதிகள் வேண்டி தவெக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட கோபால்பட்டி பகுதியில் நிலவும் பல்வேறு அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றக் கோரியும், பொதுமக்களின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வலியுறுத்தியும், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சார்பில் கோபால்பட்டி பேருந்து நிலையம் அருகே இன்று எழுச்சியான கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் எஸ்.எம். நிர்மல்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், சாணார்பட்டி ஒன்றியச் செயலாளர் நாகூர் கனி, ஒன்றிய இணைச் செயலாளர் ரஞ்சித்குமார், பொருளாளர் அழகர்சாமி, துணைச் செயலாளர்கள் ஹரிஹரன், பாலசுப்ரமணியன் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர மற்றும் கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இதில் மகளிர் அணியினர் உட்பட நூற்றுக்கணக்கான கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், வேம்பார்பட்டி, கணவாய்பட்டி, அஞ்சுகுழிப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்களின் முக்கியத் தேவையாகக் கருதப்படும் கோபால்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் பணியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்; கோம்பைப்பட்டி மற்றும் கே.மேட்டுப்பட்டி பகுதிகளில் இடுகாட்டிற்குச் செல்ல சாலை வசதி மற்றும் புதிய நியாயவிலைக் கடைகளை அமைக்க வேண்டும்; அஞ்சுகுழிப்பட்டி பகுதிக்கு நவீன பேருந்து நிலையம் மற்றும் பொதுக் கழிப்பறை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. மேலும், மலைக்கிராமங்களில் துண்டிக்கப்பட்டுள்ள தொலைத்தொடர்பு சேவைகளைச் சீரமைக்க வேண்டும், கனிம வளங்கள் மற்றும் ஆற்று மணல் கொள்ளையைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், அரசு வழங்கிய நிலங்களுக்கு விரைவாகப் பட்டா வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. இவை தவிர, பள்ளி மாணவர்களின் நலன் கருதி காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் பேருந்து வசதி, கன்னியாபுரம் சுங்கச்சாவடியை அகற்றுதல் மற்றும் சட்டவிரோத மது விற்பனையைத் தடுத்தல் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து தமிழக வெற்றிக் கழகத்தினர் தீவிர போராட்டத்தை முன்னெடுத்தனர். மக்களின் அடிப்படைத் தேவைகள் புறக்கணிக்கப்பட்டால் அடுத்தகட்டமாகப் பெரும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என இந்த ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version