கொடைக்கானல் கோக்கர்ஸ் வாக் அருகே உள்ள தனியார் மருத்துவமனை வளாகத்திற்குள் இன்று மாலை ஒற்றை காட்டெருமை புகுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விரட்ட முயன்ற வனப் பணியாளரைத் தாக்க முயன்றதால், அங்கிருந்த பொதுமக்கள் அச்சத்தில் ஓட்டம் பிடித்தனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில மாதங்களாக காட்டெருமைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி நகர்ப் பகுதிகளில் உலா வருவது அதிகரித்து வருகிறது. இது குடியிருப்புப் பகுதிகளில் முகாமிடுவதும், மனிதர்களைத் தாக்குவதும் வாடிக்கையாகிவிட்டது.
இந்நிலையில், கோக்கர்ஸ் வாக் சுற்றுலாத் தலம் அருகே உள்ள ஒரு பிரபல தனியார் மருத்துவமனை வளாகத்திற்குள் ஒற்றை காட்டெருமை திடீரென நுழைந்தது. மருத்துவமனை வளாகத்தில் இருந்த பச்சை புற்களை மேய்ந்தபடி அது நீண்ட நேரம் அங்கேயே முகாமிட்டது. காட்டெருமை வளாகத்திற்குள் புகுந்ததால், மருத்துவமனை நோயாளிகள் உள்ள பகுதிக்குள் நுழையக்கூடும் என்ற அச்சத்தில் பரபரப்பு நிலவியது.
அப்போது, அங்கிருந்த தற்காலிக வேட்டைத் தடுப்புப் பணியாளர் ஒருவர் காட்டெருமையை அங்கிருந்து விரட்ட முயற்சித்தார். ஆனால், காட்டெருமை ஆவேசமடைந்து, பணியாளரைத் தாக்குவது போல் வேகமாகத் தலையைச் சுழற்றியபடி பாய்ந்தது.இதனைக் கண்ட மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் பயந்துபோய் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.வேட்டைத் தடுப்புப் பணியாளர் தொடர்ந்து காட்டெருமையை விரட்டியதையடுத்து, அது மருத்துவமனை வளாகத்தை விட்டு வெளியேறியது. கொடைக்கானல் நகர்ப் பகுதிகளில் காட்டெருமைகளின் நடமாட்டம் அதிகரிப்பது குறித்துப் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கவலை தெரிவித்துள்ளனர். மனித – விலங்கு மோதல் ஏற்பட்டு உயிர்ச் சேதம் ஏற்படுவதற்கு முன்பாக, வனத்துறையினர் இதில் கவனம் செலுத்தி, வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டெருமைகள் நகர் பகுதிக்குள் வராமல் தடுக்க நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


















