கோவை மாவட்டம் அன்னூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆண்டுதோறும் மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளப் பாதிப்புகளுக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், தமிழக அரசின் நகர்ப்புற வளர்ச்சித்துறை அதிகாரிகள் அடங்கிய உயர்மட்டக் குழுவினர் நேற்று தீவிர ஆய்வு மேற்கொண்டனர். அன்னூர் பேரூராட்சியின் தர்மர் கோவில் வீதி, புவனேஸ்வரி நகர் மற்றும் பழனி கிருஷ்ணா அவென்யூ போன்ற தாழ்வான பகுதிகளில், கனமழை பெய்யும் போது குளத்து நீருடன் மழை நீரும் சேர்ந்து குடியிருப்புகளுக்குள் புகுந்து விடுவது தொடர்கதையாக உள்ளது. இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க உரிய நிதி ஒதுக்கீடு செய்யக் கோரி, நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவிடம் பேரூராட்சி சார்பில் அளிக்கப்பட்ட மனுவின் அடிப்படையில், இந்த நேரடி ஆய்வுக்கு உத்தரவிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தின் (TUFIDCO) பொது மேலாளர் முருகன் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் நேற்று அன்னூர் வந்தடைந்தனர். அவர்கள் அன்னூர் குளத்தின் தற்போதைய கொள்ளளவு, தேங்கியுள்ள நீரின் மட்டம், உபரி நீர் வெளியேறும் மதகுகளின் நிலை மற்றும் அப்பகுதியின் சராசரி மழை அளவு குறித்த புள்ளிவிவரங்களைக் கேட்டறிந்தனர். ஆய்வின் போது பேசிய பொது மேலாளர் முருகன், குளத்தில் தண்ணீர் தேங்கும் போதே தெற்குப் புற மதகை முறையாகச் சீரமைத்துத் திறந்து விடுவதன் மூலம், தர்மர் கோவில் வீதி மற்றும் இட்டேரி வீதி வழியாக நீரைத் தடையின்றி வெளியேற்ற முடியும் என்றும், இரண்டாவது ஷட்டரைத் திறப்பதன் மூலம் உபரி நீர் வழிந்தோடச் செய்ய முடியும் என்றும் தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கினார்.
தொடர்ந்து பேசிய பேரூராட்சித் தலைவர் பரமேஸ்வரன், “குடியிருப்புகளுக்குள் நீர் புகுவதைத் தடுத்து, மழை நீரை கிழக்கு நோக்கித் திருப்பிவிடப் புதிய வடிகால் அமைப்பு உருவாக்குவது அவசியம். இதற்காக சுமார் இரண்டு கோடி ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்” என அதிகாரிகளிடம் வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் குழுவினர் தர்மர் கோயில் வீதி, இட்டேரி வீதி, நாகமாபுதூர், பனந்தோப்பு மயில் மற்றும் அல்லிகுளம் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கால்நடைகள் மற்றும் விளைநிலங்கள் பாதிப்படையாத வகையில் திட்டங்களைச் செயல்படுத்த ஆய்வு செய்தனர். இப்பணிகளுக்கான விரிவான திட்ட அறிக்கையை (DPR) உடனடியாகத் தயார் செய்து சமர்ப்பிக்குமாறு பொறியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டது. இந்த ஆய்வில் துணைத் தலைவர் விஜயகுமார், செயல் அலுவலர் கார்த்திகேயன், நிர்வாக பொறியாளர் மோகன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இத்திட்டம் அமலுக்கு வரும் பட்சத்தில், பல ஆண்டுகளாக வெள்ளப் பாதிப்பால் அவதிப்படும் அன்னூர் பகுதி மக்களுக்குப் பெரும் நிம்மதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

















