கொடைக்கானலில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டெருமைகள் நகர்ப் பகுதிகளில் உலா வருவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பியர் சோலா குடியிருப்புப் பகுதியில் முகாமிடும் காட்டெருமைக் கூட்டத்தால் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ/மாணவிகள் உரிய நேரத்தில் பள்ளிக்கும் பணிக்கும் செல்ல முடியாமல் தவிக்கின்றனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக வனவிலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் இடையேயான மோதல் அதிகரித்து வருகிறது. காட்டெருமைகள் நகர் பகுதிகளில் உலா வருவது, விவசாயிகளின் கால்நடைகளைத் தாக்குவது, பொதுமக்களை அச்சுறுத்துவது வாடிக்கையாகிவிட்டது.
இந்நிலையில், கொடைக்கானல் நகரின் முக்கிய குடியிருப்புப் பகுதியான பியர் சோலா மற்றும் அதன் பிரதான சாலையில் காலை மற்றும் மாலை வேளைகளில் காட்டெருமைக் கூட்டம் தொடர்ந்து முகாமிட்டு நிற்கிறது. காட்டெருமைகள் சாலையை விட்டு அகலாமல் நீண்ட நேரம் அங்கேயே நிற்பதால், பியர் சோலா குடியிருப்பு வாசிகள் மற்றும் அந்தச் சாலையில் பயணிக்கும் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.
காலை வேளை: பள்ளி மாணவ/மாணவிகள் உரிய நேரத்திற்குப் பள்ளிக்குச் செல்ல முடியாமலும், பணிக்குச் செல்வோர் தாமதமாகவும் செல்கின்றனர். அதேபோல, மாலை வேளையில் பள்ளி முடிந்து வீடு திரும்புபவர்களும், பணி முடிந்து வருபவர்களும் வீட்டிற்குச் செல்ல முடியாமல் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது.காட்டெருமைகளின் அச்சுறுத்தல் காரணமாக மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். குடியிருப்புப் பகுதிகளில் முகாமிடும் இந்தக் காட்டெருமைக் கூட்டத்தால், எந்த நேரத்திலும் மனித-விலங்கு மோதல் ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, வனத்துறையினர் இந்தப் பிரச்சனையில் உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும் எனவும், பியர் சோலா குடியிருப்புப் பகுதிகளில் முகாமிடும் காட்டெருமைக் கூட்டத்தைக் கட்டுப்படுத்தி, அவற்றை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உணவு மற்றும் தண்ணீர் தேடி நகர் பகுதிக்கு வரும் காட்டெருமைகள், சமீப காலமாக மலைப்பகுதி நகரங்களில் அதிகரித்துள்ளன. இதைத் தடுக்க, வனத்துறையினர் காட்டுப்பகுதிகளில் அவற்றிற்குத் தேவையான தண்ணீர் தொட்டிகள் மற்றும் உணவு வசதிகளை மேம்படுத்த வேண்டும் எனச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.


















