தென்காசி மாவட்டம் முத்துமாலைபுரத்தில் தமிழர்களின் பாரம்பரியப் பண்பாட்டை உலகறியச் செய்யும் வகையில், வெளிநாட்டுப் பயணிகள் பங்கேற்ற உற்சாகமான பொங்கல் விழா நேற்று (09.01.2026) நடைபெற்றது. தோரணமலை முருகன் கோவில் பரம்பரை அறங்காவலர் ஆ. செண்பகராமன் ஏற்பாடு செய்திருந்த இந்த விழாவில், ஸ்பெயின், நெதர்லாந்து மற்றும் கனடா ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் கலந்துகொண்டு தமிழர்களின் கலாச்சாரத்தைக் கண்டு வியந்தனர்.
முத்துமாலைபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஆ. செண்பகராமன், தனது முன்னோர்கள் வாழ்ந்த பூர்வீக இல்லத்தைத் தனது பெற்றோரின் நினைவாக ‘ஆதிநாராயணன்-சந்திரலீலா மாலை நேரக் கட்டணமில்லா படிப்பகமாக’ மாற்றியுள்ளார். சுமார் 102 மாணவ-மாணவிகள் கல்வி பயிலும் இந்தப் படிப்பகத்தின் சார்பில், மாணவர்களுக்கு இலவசக் கல்வி உபகரணங்கள் வழங்கப்படுவதோடு, அருகில் அவர்களுக்கு எனத் தனி விளையாட்டு மைதானமும் அமைக்கப்பட்டுள்ளது. அந்த மைதானத்தில் தான் நேற்று மாலை பொங்கல் விழா அரங்கேறியது. வண்ணக் காகிதங்களால் அலங்கரிக்கப்பட்ட மைதானத்தில், பாரம்பரிய முறைப்படி கரும்பு, மஞ்சள் குலைகள் கட்டி மூன்று மண் பானைகளில் பொங்கல் வைக்கப்பட்டது. பானையில் பொங்கல் பொங்கி வரும்போது, வெளிநாட்டுப் பயணிகளும் மாணவர்களுடன் இணைந்து ‘பொங்கலோ பொங்கல்’ என உற்சாகமாக முழக்கமிட்டது அனைவரையும் கவர்ந்தது.
இந்த விழாவின் சிறப்பம்சமாக, கனடா நாட்டைச் சேர்ந்த முருக பக்தரான கேதர்நாதன் சுப்பிரமணியன், உலகப் பொதுமறையான திருக்குறளைத் துல்லியமாக ஒப்புவித்து அங்கிருந்தோரை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். கடந்த சில நாட்களாகவே இந்த இல்லத்திற்கு வந்து மாணவர்களுடன் கலந்துரையாடி வரும் இவர், தமிழ் மொழியின் மீதான தனது பற்றினை இதன் மூலம் வெளிப்படுத்தினார். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில், தமிழர்களின் வாழ்வாதாரமான மாடுகளுக்குச் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. விழாவில் பங்கேற்ற மாணவர்கள் “விவசாயத்தைப் பேணுவோம், தமிழர் கலாச்சாரத்தை மறவோம், கிராம பண்பாட்டை வளர்ப்போம்” என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
நிகழ்வின் இறுதியில், வெளிநாட்டுப் பயணிகளுக்குத் தமிழர் முறைப்படி மரியாதை செய்யப்பட்டு, அவர்கள் மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கினர். பின்னர், வெளிநாட்டினரை மாட்டு வண்டியில் அமர வைத்து கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாகக் கூட்டிச் சென்றனர். கிராமிய மணம் மாறாத இந்த மாட்டு வண்டிப் பயணம் வெளிநாட்டினருக்கு ஒரு புதுவிதமான அனுபவத்தைத் தந்தது. விழாவில் கலந்து கொண்ட பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் இனிப்புப் பொங்கல் வழங்கப்பட்டது. கல்வி, விளையாட்டு மற்றும் கலாச்சாரம் என அனைத்தையும் ஒருங்கிணைத்து நடத்தப்பட்ட இந்த விழா முத்துமாலைபுரம் கிராமத்தையே திருவிழா கோலமாக மாற்றியது.

















