ஆண்டிப்பட்டி டாஸ்மார்க் பாரில் மதுபோதையில் பூனை கொடூரமாக தாக்கி கொலை

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி – தெப்பம்பட்டி சாலையில் அமைந்துள்ள டாஸ்மார்க் மதுபான பாரில், மதுபோதையில் பூனை ஒன்றை கொடூரமாக தாக்கி கொன்ற சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த சம்பவம் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஆண்டிப்பட்டி அருகே தெற்கு மூனாண்டிபட்டி கிராமத்தைச் சேர்ந்த கண்ணன், மோகன், நவீன் ஆகிய மூன்று பேர் சம்பந்தப்பட்ட மதுபான பாரில் மது அருந்திக் கொண்டிருந்துள்ளனர். அப்போது பாரில் வளர்க்கப்பட்டு வந்த பூனை ஒன்று அவர்கள் அருகே சுற்றி வந்ததாக கூறப்படுகிறது.

மது போதையில் இருந்த கண்ணன் என்பவர் அந்த பூனையை பிடித்து சுவரில் வீசியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த பூனை துடித்துக் கொண்டிருந்த நிலையில், தொடர்ந்து கண்ணன் அந்த பூனையை மேஜை மீது மூன்று முறை தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் அந்த பூனை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

இந்த சம்பவத்தை பார்த்து பாரில் பணிபுரியும் சந்திரசேகர் என்பவர் குற்றம்சாட்டப்பட்டவர்களை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மூவரும் சேர்ந்து சந்திரசேகரை தாக்கியுள்ளனர். இதனைத் தடுக்க முயன்ற மற்றொரு ஊழியரான செல்லபாண்டி என்பவரையும் அவர்கள் தாக்கிவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதலில் படுகாயமடைந்த சந்திரசேகர் மற்றும் செல்லபாண்டி ஆகியோர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மதுபான பாரில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் சம்பவம் முழுவதும் பதிவாகியுள்ளது. இதனை ஆதாரமாக கொண்டு சந்திரசேகர் ராஜதானி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, சம்பவத்தில் ஈடுபட்ட நவீன் என்பவரை கைது செய்துள்ளனர்.

தலைமறைவாக உள்ள கண்ணன் மற்றும் மோகன் ஆகிய இருவரையும் பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், வாயில்லா ஜீவனான பூனையை கொடூரமாக தாக்கி கொல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பொதுமக்களிடையே கடும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version