திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாற்றுத்திறனாளி ஒருவர் தனது வாழ்வாதாரத்திற்காக வழங்கப்பட்ட பட்டா நிலம் ஆக்கிரமிக்கப்பட்டதைக் கண்டித்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மேற்கு வட்டத்திற்குட்பட்ட செட்டிநாயக்கன்பட்டி கிராமம், கள்ளிப்பட்டியைச் சேர்ந்தவர் வீரையா. மாற்றுத்திறனாளியான இவருக்கு, தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டத்தின் கீழ், ஆளக்குவார்பட்டி பகுதியில் காலி மனை ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பட்டாவை தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் வீரையாவிற்கு நேரில் வழங்கி சிறப்பித்தார்.
அமைச்சர் பட்டா வழங்கியதைத் தொடர்ந்து, வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரில் வந்து நிலத்தை அளவீடு செய்து வீரையாவிற்கு அடையாளம் காட்டினர். இதனையடுத்து, தமிழக அரசின் ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் அந்த இடத்தில் வீடு கட்டும் பணியை வீரையா தொடங்கினார். இதற்காகப் பள்ளங்கள் தோண்டி பேஸ்மட்டம் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன. இந்தச் சூழலில், அதே பகுதியைச் சேர்ந்த 80 வயது மதிக்கத்தக்க முதிய பெண்மணி ஒருவர், அடியாட்களுடன் வந்து கட்டுமானப் பணிகளைத் தடுத்து நிறுத்தியுள்ளார். “இந்த இடம் 1997-ஆம் ஆண்டே எனக்கு அரசு வழங்கியது, இதில் நீ எப்படி வீடு கட்டலாம்?” என்று மிரட்டல் விடுத்ததுடன், ஜேசிபி இயந்திரத்தைக் கொண்டு கட்டுமானத்திற்காகத் தோண்டப்பட்ட குழிகளை மூடிவிட்டு, அங்கிருந்த கட்டுமானப் பொருட்களையும் சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட வீரையா, தனது நிலத்தை மீட்பதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பலமுறை புகார் மனுக்கள் அளித்துள்ளார். இருப்பினும், வருவாய்த்துறை அதிகாரிகள் எவ்வித மேல்நடவடிக்கையும் எடுக்காமல் காலம் கடத்தி வந்ததால், கடும் மன உளைச்சலுக்கு ஆளான அவர் இன்று ஆட்சியர் அலுவலக வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் மற்றும் செய்தியாளர்களிடம் தனது நிலையை விளக்கி அவர் கண்ணீர் வடித்தார். இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் அவரை சமாதானப்படுத்தி மாவட்ட ஆட்சியரிடம் அழைத்துச் சென்றனர்.
வீரையாவின் புகாரைப் பரிசீலித்த மாவட்ட ஆட்சியர், இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிடுமாறு திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியருக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்தார். அமைச்சரால் வழங்கப்பட்ட பட்டா நிலத்தில் வீடு கட்ட இடையூறு செய்பவர்கள் குறித்து விசாரணை நடத்தி, வீரையாவிற்குரிய இடத்தை அவரிடம் ஒப்படைத்து, வீடு கட்டும் பணிகளைத் தடையின்றித் தொடர வழிவகை செய்ய வேண்டும் என்று ஆட்சியர் அறிவுறுத்தினார். அரசின் உயர்மட்ட அமைச்சரால் வழங்கப்பட்ட நிலத்திலேயே இத்தகைய ஆக்கிரமிப்பு நடந்துள்ளது சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
