சென்னை:
நீரிழிவு நோயாளிகளுக்காக விரலில் ஊசி குத்தாமல் ரத்த சர்க்கரை அளவை கணக்கிடும் அதிநவீன கை கடிகார சாதனத்தை சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
சென்னை ஐஐடி பல துறைகளில் பொதுமக்களுக்கு பயனுள்ள தொழில்நுட்பங்களை உருவாக்கி வருகிறது. அதில், நீரிழிவு நோயாளிகளின் தினசரி சிக்கலாக இருந்த “விரலில் ஊசி குத்தி ரத்த மாதிரி எடுக்கும்” பிரச்னைக்கு தீர்வாக இந்த புதிய கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது.
விரல்குத்து தேவையில்லா கருவி
சென்னை ஐஐடி உலோகவியல் மற்றும் பொருட்கள் இன்ஜினியரிங் துறையின் பேராசிரியர் பரசுராமன் சுவாமிநாதன் தலைமையிலான குழு இந்த கருவியை வடிவமைத்துள்ளது. வாட்ச் வடிவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த சாதனத்தில் சிறிய சென்சார் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த சென்சார், தோலில் உள்ள 1 மில்லிமீட்டர் அளவிலான நுண்ணிய ஊசியின் மூலம் ரத்த நாளங்களுக்கு அருகிலுள்ள திரவங்களை ஆய்வு செய்து, அதிலுள்ள குளுக்கோஸ் அளவை கணக்கிடுகிறது. சில விநாடிகளில் அந்த தகவல் கை கடிகாரத்தின் திரையில் தெரியும். இதற்கான வடிவமைப்பிற்கு ஏற்கனவே காப்புரிமை பெறப்பட்டுள்ளது.
குறைந்த செலவில், அதிக துல்லியத்துடன்
இந்த புதிய தொழில்நுட்பம் வழக்கமான “சுய-ரத்த குளுக்கோஸ் கண்காணிப்பு” கருவிகளை விட மலிவு விலையில் கிடைக்கும் என்று ஐஐடி தெரிவித்துள்ளது. ரத்த மாதிரி எடுக்கும் போது நுண்ணிய ஊசி மட்டும் தேவைக்கேற்ப மாற்றிக்கொள்ளலாம். அதே கருவியை தொடர்ந்து பயன்படுத்த முடியும் என்பதும் இதன் சிறப்பாகும்.
மேலும், இக்கருவி துல்லியமான அளவீடுகளை வழங்குவதால் மருத்துவ ரீதியாக நம்பகமானதாகவும் உள்ளது. குறைந்த சக்தி கொண்ட திரையின் மூலமாக ரத்த சர்க்கரை அளவை எளிதில் காண முடியும்.
இந்திய ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்ட இந்த தொழில்நுட்பம், வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மருத்துவ சாதனங்களுக்கு மாற்றாக அமையும் என்று சென்னை ஐஐடி நம்பிக்கை தெரிவித்துள்ளது.
நீரிழிவு நோயாளிகள் நாள்தோறும் எதிர்கொள்ளும் ஊசி குத்தும் வேதனைக்கு தீர்வாக, இந்த வாட்ச் வடிவ ரத்த சர்க்கரை கண்காணிப்பு கருவி நிச்சயம் வரப்பிரசாதமாக இருக்கும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
