நாகப்பட்டினம் தாலுக்கா அலுவலகம் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு
நாகப்பட்டினம் மாவட்டம், கொட்டாரக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சசிகுமார். இவர் தனது நிலத்திற்கான பட்டா மாறுதல் தொடர்பான விண்ணப்பம் மற்றும் ஆவணப் பணிகளுக்காக, தனது டாடா இண்டிகோ காரில் நாகப்பட்டினம் தாலுக்கா அலுவலகத்திற்கு வந்துள்ளார்.
அலுவலகத்திற்கு எதிரே சாலையோரமாகத் தனது காரைப் பாதுகாப்பாக நிறுத்திவிட்டு, சசிகுமார் அலுவலக உள்ளே சென்றுள்ளார். அப்போது, யாரும் எதிர்பாராத நேரத்தில் காரின் முன்பகுதியில் உள்ள இன்ஜின் பகுதியில் இருந்து திடீரெனப் புகை கிளம்பி, மளமளவெனத் தீப்பற்றி எரியத் தொடங்கியது.
கார் தீப்பிடித்து எரிவதைக் கண்ட அலுவலகப் பணியாளர்களும், பொதுமக்களும் அதிர்ச்சியடைந்து உடனடியாகத் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து விரைந்து வந்த நாகப்பட்டினம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர், துரிதமாகச் செயல்பட்டுத் தண்ணீரைப் பீய்ச்சியடித்துத் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீயணைப்பு வீரர்களின் விரைவான நடவடிக்கையால், தீ காரின் மற்ற பகுதிகளுக்குப் பரவாமலும், அருகிலிருந்த பிற வாகனங்களுக்குச் சேதம் ஏற்படாமலும் தடுக்கப்பட்டது.
நல்வாய்ப்பாக இந்த விபத்தில் யாருக்கும் எவ்விதக் காயமும் ஏற்படவில்லை. இச்சம்பவம் குறித்து நாகப்பட்டினம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரசு அலுவலக வளாகம் முன்பு பட்டப்பகலில் கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.







