விழுப்புரம்:
போதைப்பொருள் விற்பனைக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் வருவாய் துறையும் காவல்துறையும் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் திருச்சி சாலையில் அமைந்துள்ள ஒரு தனியார் கல்லூரியில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுடன் பள்ளிக் கல்வித் துறை சார்பில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் இயக்குநர் கண்ணப்பன் தலைமையிலான பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வாசிப்பு இயக்கம்” திட்டம் குறித்து விளக்கினார். பள்ளிகளில் 6, 7, 8ஆம் வகுப்பில் பயிலும் மாணவர்களின் வாசிப்பு மற்றும் எழுதும் திறனை மேம்படுத்தும் நோக்கில் சிறு புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அவர்களின் அறிவாற்றல் மேம்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும், 10ம் மற்றும் 12ம் வகுப்பை முடிக்கிற மாணவர்கள் திறமையானவர்களாக உருவாக்கப்பட வேண்டும் என்பதே நோக்கம் எனவும் கூறினார்.
போதைப்பொருள் விற்பனை தொடர்பான கேள்விக்கு பதிலளித்த இயக்குநர், “இது தொடர்பான நடவடிக்கைகளை வருவாய் துறை மற்றும் காவல்துறையே எடுக்கவேண்டும்,” எனத் தெரிவித்தார். மாணவர்களின் ஒழுக்கத்தை மேம்படுத்தும் பணிகள் குறித்து அவர் கூறும்போது, கடந்த ஆண்டுமுதல் தலைமை ஆசிரியர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு வருவதாகவும், ஒரு பள்ளியில் ஒரு தலைமை ஆசிரியர் நேரடியாக மாணவர்களை சீர்திருத்த நடவடிக்கையில் ஈடுபட்டதையும் எடுத்துக்காட்டாகக் குறிப்பிட்டார்.
ஆய்வுக்கூட்டம் பள்ளிக் கல்வித் துறையின் நிகழ்வாக இருந்த போதிலும், அரசு பள்ளிகளைச் சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் கூட்டமாக அழைக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி ஏன் தனியார் கல்லூரியில் நடத்தப்படுகிறது என்பது தொடர்பான கேள்விக்கு, இயக்குநர் கண்ணப்பன் பதிலளிக்க மறுத்து அமைதியாகவே சென்றது குறிப்பிடத்தக்கது.
