ஜெய்ப்பூர்: இந்திய அணியின் இளம் வீரரும், ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியில் விளையாடிய யாஷ் தயாள் மீதான பாலியல் குற்றச்சாட்டு புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெய்ப்பூரில் உள்ள சங்கனர் காவல் நிலையத்தில், அவருக்கு எதிராக POCSO சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின்படி, அவர் சிறுமியாக இருந்த 17 வயதில் யஷ் தயாளால் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறியுள்ளார்.
2 ஆண்டுகளாக தொடர்ந்த வன்கொடுமை ?
பாதிக்கப்பட்ட பெண் கூறுவதுபடி, ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் போது, தனது தொழில்முனைவுச் சிபாரிசை பயன்படுத்தி, யஷ் தயாள் அவரை சீதாபுரா பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் சந்தித்ததாகவும், அங்கும் பின்னும் பலமுறை தன்னை பாலியல் முறையில் துன்புறுத்தியதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். இது இரண்டாண்டுகள் தொடர்ந்ததாகவும், பின்னர் திருமண வாக்குறுதி அளித்து ஏமாற்றியதாகவும் தெரிவித்துள்ளார்.
முந்தைய புகார் வழக்கும் நிலுவையில்
இது மட்டுமின்றி, காசியாபாதைச் சேர்ந்த ஒரு பெண், யஷ் தயாளுக்கு எதிராக திருமண மோசடி புகார் அளித்திருந்தார். அந்த புகார் உத்தரப்பிரதேச மாநில அரசின் IGRS ஆன்லைன் குறை தீர்க்கும் போர்டல் வழியாக பதிவு செய்யப்பட்டு, முதல்வரின் தனிப்பிரிவு அதற்கு உரிய விசாரணை உத்தரவு வழங்கியது. இதனையடுத்து, காசியாபாத் காவல் நிலையத்தில் யஷ் தயாள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
உயர் நீதிமன்ற தற்காலிக தடை
இந்த வழக்கிற்கு எதிராக, யஷ் தயாள் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அதில், தன்னைக் கைது செய்ய தடையுத்தரவு வழங்க வேண்டும் என கோரியிருந்தார். விசாரணைக்கு பிறகு, நீதிமன்றம் அவரது கைது மீது இடைக்கால தடை விதித்தது