அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த பிரிட்டனை சேர்ந்தவருக்குப் பதில், வேறு ஒருவரின் உடல் வழங்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூன் 12-ம் தேதி நிகழ்ந்த அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்த பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த ஒருவரின் உடலுக்குப் பதிலாக, வேறொருவரின் உடல் வழங்கப்பட்டுள்ளது. இதனை லண்டன் கொண்டு சென்ற குடும்பத்தினர், இறுதிச் சடங்கு நடைபெறும்போது தான் அது வேறொருவரது உடல் எனக் கண்டறிந்து, இறுதிச் சடங்கை நிறுத்தியதாக அந்நாட்டின் டெய்லி மெயில் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
மற்றொரு சம்பவத்தில் ஒரே பெட்டியில் இருவரது உடல் உறுப்புகள் கலந்து இருந்ததும் கண்டறியப்பட்டதாக அந்தச் செய்தி தெரிவிக்கிறது. இதனால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் கலக்கம் அடைந்திருப்பதாக, பிரிட்டன் வழக்கறிஞர் ஜேம்ஸ் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் உடல்களை சரியான முறையில் கண்டறிந்து வழங்க வேண்டும் என்பதே சம்பந்தப்பட்ட குடும்பத்தினரின் கோரிக்கை எனவும் அவர் கூறியுள்ளார்.
தவறான உடல் அனுப்பியதாக கூறப்படும் விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார், உயிரிழந்தவர்களின் உடல்கள் பல்வேறு தொழில்நுட்ப பரிசோதனைகளுக்குப் பிறகே ஒப்படைக்கப்பட்டதாக கூறிய அவர், இதுதொடர்பாக பிரிட்டன் அதிகாரிகளிடம் கேட்டறியப்படும் என்றும் கூறியுள்ளார்.
















