தென்மாவட்டங்களில் உள்ள 4 சுங்கச் சாவடிகளில் அரசு பேருந்துகளுக்கு அனுமதியில்லை எனப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை, வரும் 31ம் தேதி வரை சென்னை உயர்நீதிமன்றம் நிறுத்திவைத்துள்ளது.
கப்பலூர், நாங்குநேரி, எட்டூர் வட்டம், சாலைப்புதூர் ஆகிய 4 சுங்கச்சாவடிகள் வழியாக இயக்கப்படும் அரசுப் பேருந்துகளுக்கான கட்டணம் 276 கோடி ரூபாயை போக்குவரத்து கழகங்கள் செலுத்த உத்தரவிடக்கோரி சுங்கச்சாவடி நிறு வனங்கள் வழக்கு தொடர்ந்திருந்தன.
இதனை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேசன், அந்த 4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசுப் பேருந்துகளை இன்று முதல் இயக்க தடைவிதித்தார். இதையடுத்து, தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன், இந்த உத்தரவை நிறுத்திவைக்குமாறும், பேச்சுவார்த்தை நடந்து வருவதால், விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும் எனவும் உறுதியளித்தார். அதை ஏற்று பேருந்துகளை அனுமதிக்கக் கூடாது என்ற தடை உத்தரவை வரும் 31 ஆம் தேதி வரை நீதிபதி நிறுத்திவைத்தார்.
இதையடுத்து, கப்பலூர், நாங்குநேரி, எட்டூர் வட்டம், சாலைப்புதூர் ஆகிய 4 சுங்கச் சாவடிகளிலும் இன்று வழக்கம்போல அரசு பேருந்துகள் இயங்கி வருகின்றன. அப்போது, அரசு பேருந்து ஓட்டுநர்களிடம், நீதிமன்ற தீர்ப்பு குறித்து துறை அதிகாரிகளிடம் தெரிவிக்கும்படி, சுங்கச்சாவடி ஊழியர்கள் கையெழுத்து கேட்டனர். அதற்கு பலர் கையெழுத்திட்ட நிலையில், சிலர் கையெழுத்திட மறுத்ததால், சாலைப்புதூர் சுங்கச் சாவடியில் வாக்குவாதம் ஏற்பட்டது.