சென்னை :
தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் தலைமையில், கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், அடுத்த தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் மற்றும் கட்சியின் நகர்வு தொடர்பாக முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
கூட்டத்தில், அஜித் குமார் கொலை, விவசாயிகள் பிரச்னை, முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியார் மற்றும் அண்ணா குறித்து வெளியிடப்பட்ட காணொளி, பரந்தூர் விமான நிலைய விவகாரம் உள்ளிட்ட பல்வேறு சமகால பிரச்சனைகள் குறித்து 15 முதல் 20 தீர்மானங்கள் வரை நிறைவேற்றப்பட உள்ளன. இதில் முதலில் வரும் இரண்டு தீர்மானங்களை விஜய் நேரடியாக வாசிக்க இருப்பது முக்கிய அம்சமாகக் கருதப்படுகிறது.
இத்துடன், மாவட்ட அளவிலான நிர்வாகிகள் நியமனம் முடிவடைந்த நிலையில், தற்போது ஒன்றியம் மற்றும் பகுதி அளவிலான நிர்வாகிகள் நியமனத்தை விரைவில் நிறைவு செய்யும் திட்டம் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
மிகவும் முக்கியமாக, எதிர்வரும் தேர்தலை முன்னிட்டு, விஜய் நடத்தும் சுற்றுப்பயணம் குறித்து முக்கிய ஆலோசனை நடைபெறவுள்ளது. மக்களை நேரடியாக சந்திக்க பொதுக்கூட்டம், சாலையோர சந்திப்பு, சிறு கூட்டங்கள் என மூன்று விதமாக இந்தப் பயணம் நடைபெறவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக மாவட்ட செயலாளர்களுடன் விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது.

















