சமூக நீதி விடுதியில் மாட்டு கறி வழங்குவது குறித்து அமைச்சர் வன்னியரசு பேசியதை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஏராளமானோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.*
சென்னை, சைதாப்பேட்டையில் உள்ள, எம்.சி.ராஜா சமூக நீதி மாணவர் விடுதியில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் வன்னி அரசு, திடீர் ஆய்வு மேற்கொண்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு, அதன் தரம் குறித்து ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வன்னியரசு.. சில மாணவர்கள், உணவு பட்டியலில் மாட்டிறைச்சியை சேர்க்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து, மாணவர்கள், அதிகாரிகள் என, அனைத்து தரப்பினரிடமும் ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
சமூக நீதி விடுதிகளில் மாட்டு இறைச்சி வழங்கக் கூடாது என பல்வேறு தரப்பினரும் அமைச்சர் வன்னியரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு புதிய தமிழகம் கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் தியாகராஜன் தலைமையில் சமூக நீதி மாணவர் விடுதி உணவுப்பட்டியலில் மாட்டுக்கறியை சேர்க்க கூடாது எனவும், மாணவர்களின் கோரிக்கை குறித்து அதிகாரிகளுடன் பேசி ஆலோசிக்கப்படும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் வன்னியரசு, அந்தக் கருத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தி கண்டனம் முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஃபார்வர்டு பிளாக் கட்சியினர், இந்து மக்கள் கட்சியினர், பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று அமைச்சர் வன்னியரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

















