திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு டீசல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற பொறியியல் பட்டதாரி சகோதரர்களால் பரபரப்பு.
தங்கள் சொத்தை அபகரிக்க முயல்பவருக்கு ஆதரவாக செயல்படும் போலீசாரை கண்டித்தும், போலி புகார்களால் தொடர்ந்து தொல்லை கொடுத்து வரும் காவல்துறையரை கண்டித்தும் பொறியியல் பட்டதாரி சகோதரர்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு..
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாதாந்திர விவசாயிகள் குறைதீர் கூட்டம் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே வடுவூர் பகுதியைச் சேர்ந்த வரதராஜன் – வசந்தி தம்பதியினருக்கு ராஜராஜன்(30) ஜெயஸ்ரீராம்(25) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.
பொறியியல் பட்டதாரியான இருவரும் தற்போது தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்களது குடும்பத்தினர் கடந்த 43 ஆண்டுகளாக இந்த பகுதியில் வசித்து வரும் நிலையில் அவர்களது தந்தையான வரதராஜன் இறந்த நிலையில், அவர்கள் வீடு இருக்கும் இடமும், ஐந்து ஏக்கர் நிலமும் தனக்கு சொந்தமானது என்று அதே பகுதியை சேர்ந்த அவர்களது உறவினராக ரங்கராஜ் என்பவர் உரிமை கோரியதாக கூறப்படுகிறது.
இதனை எதிர்த்து வசந்தி தரப்பில் நீதிமன்றத்தை அணுகிய நிலையில், அவர்களது எதிர்தரப்பான ரங்கராஜ் என்பவர் வரதராஜன் – வசந்தி தம்பதியின் மகன்களான ராஜராஜன் மற்றும் ஜெயஸ்ரீராம் மீது வடுவூர் காவல்நிலையத்தில் இரண்டு வழக்குகளும் மன்னார்குடி காவல் நிலையத்தில் ஒரு வழக்கு என பல்வேறு வழக்குகளை தொடுத்துள்ளார்.
இதன் காரணமாக பலமுறை தங்களை காவல்துறையினர் விசாரித்து வருவதால் அரசு தேர்வுக்கு தயாராகி வரும் தாங்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகி வருவதாகவும், இதற்கு மேலும் தங்கள் மீது புகார் வந்தால் சரித்திர பதிவேடு குற்றவாளியாக தங்களை சேர்க்க இருப்பதாக காவல்துறையினர் மிரட்டுவதாகவும், காவல்துறையினர் தங்களது புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் ஒரு சார்பாக செயல்படுவதாகவும் கூறி இன்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பொறியியல் பட்டதாரி சகோதரர்கள் இருவரும் உடலில் டீசல் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் அவர்களை தடுத்து தண்ணீரை மேலே ஊற்றி அவர்களை பாதுகாப்பாக காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்கூட்டம் நடக்கும் சமயத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இரண்டு பட்டதாரி இளைஞர்கள் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
பேட்டி: ராஜராஜன்- தீக்குளிக்க முயன்ற பட்டதாரி இளைஞர்













