பன்னிரண்டாம் வகுப்பு மாணவனின் மரணத்துக்கு நீதி கேட்டு அலையும் பெற்றோர்.
மாணவன் தற்கொலைக்கு முன்பு எழுதி வைத்த கடிதத்தின் அடிப்படையில் பள்ளி முதல்வரையும் ஆசிரியர்களையும் தண்டிக்க வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் நேரில் புகாரளித்த தற்கொலை செய்து கொண்ட மாணவனின் பெற்றோர்.
தற்கொலை செய்த மாணவனைப் போல ஏராளமான மாணவர்கள், பள்ளி நிர்வாகத்தினரால் டார்ச்சர் செய்யப்பட்டுள்ளதாக பரபரப்பு பேட்டி..
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே ராயநல்லூர் மேலத்தெருவை சேர்ந்த ஹரிகிஷோர் (17) என்ற மாணவர் திருவாரூர் திருத்துறைப்பூண்டி சாலையில் உள்ள சாய்ராம் மெட்ரிக் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில், கடந்த 18ம் தேதி் திருத்துறைப்பூண்டியில் உள்ள வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தற்கொலை செய்து கொண்ட இந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் ஹரிகிஷோர் பள்ளியிலேயே சிறந்த மாணவனாக விளங்கியதும், அறிவியல் ஆராய்ச்சி, ரோபோட்டிக் ஆராய்ச்சி, கணினி அறிவியல் பிரிவு என பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கி பல்வேறு பாராட்டு சான்றிதழ்களையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் 12 ஆம் வகுப்பு மாணவர் தற்கொலை செய்வதற்கு முன்பு எழுதி வைத்திருந்த கடிதம் கடைசி நேரத்தில் கண்டறியப்பட்டது. அதில் தனது இறப்பிற்கு காரணம் பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளதால், அவர்கள் மீது நடவடிக்கை கோரி புகார் மனு அளிக்கப்பட்டது.
ஆனாலும் காவல்துறையினரின் நடவடிக்கை தாமதம் காரணமாக அதிருப்தியடைந்த தற்கொலை செய்து கொண்ட பனிரெண்டாம் வகுப்பு மாணவனின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் இன்று மாலை திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சதீஷ்குமார் மற்றும் திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மோகனச்சந்திரன் ஆகியோரை தனித்தனியாக சந்தித்து மனு அளித்தனர்.
அதனை தொடர்ந்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சதீஷ்குமார் ஆகியோர் இணைந்து, தற்கொலை செய்து கொண்ட மாணவனின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் ஆகியோரிடம் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஆலோசனை செய்தனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தற்கொலை செய்து கொண்ட பன்னிரண்டாம் வகுப்பு மாணவனின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கூறும் போது தெரிவித்ததாவது…
கடந்த 18ம் தேதி் இறந்த எனது மகனின் உடலை கைபற்றிய காவல்துறையினர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது என் மகன் எழுதி வைத்திருந்து எடுத்த கடிதத்தை காவல்துறையினர் மறைத்து விட்டனர். பிறகு அங்குள்ள மக்கள் போராடி அந்த கடிதத்தை வாங்கினர். அந்தக் கடிதம் தற்போது சமூக வலைத்தளங்கள் மூலம் உலகம் முழுவதும் பரவி உள்ளது. சம்மந்தப்பட்ட திருத்துறைப்பூண்டி சாய்ராம் மெட்ரிக் பள்ளியில் எனது மகனை அந்தளவிற்கு தொந்தரவு செய்துள்ளனர். சோறு திங்கிறியா..? அல்லது வேறு ஏதும் தின்கிறாயா..? என்று கூறி மாணவனை துன்புறுத்தி உள்ளனர். இவ்வாறு நடக்கும் என எதிர்பார்க்கவில்லை. என் மகன் இறப்பிற்கு நீதி கிடைக்க வேண்டும். மற்ற குழந்தைகளுக்கு இவ்வாறு ஏற்படக்கூடாது. என் மகனை தினமும் டார்ச்சர் செய்து தற்கொலைக்கு தூண்டியுள்ளனர். அதற்கு தக்க நடவடிக்கை எடுக்கபட வேண்டும். பள்ளியில் நன்றாக படிக்கக்கூடிய பையனை அதுவும் ஆராய்ச்சி படிப்பில் சிறந்து விளங்கும் மாணவனாக இருந்த எனது மாணவனை கடந்த ஒரு வருடமாக டார்ச்சர் செய்து வந்துள்ளனர். இதை வீட்டில், வெளியில் சொல்லவில்லை. அவன் இறப்பதற்கு ஒரு நாள் முன்பும் அவனை வெளியே நிறுத்தி வைத்திருந்துள்ளனர். அவமானபடுத்தியுள்ளனர். பள்ளியில் என்னை மட்டும் ஏன் இப்படி டார்ச்சர் செய்கின்றனர் என மாணவன் சக பள்ளி மாணவர்களிடம் கூறி அழுதுள்ளான். அதனால் 17ம் தேதிக்கு பிறகு நான் பள்ளிக்கு வர மாட்டேன் என்றும் தனது பள்ளி வகுப்பறையில் உள்ள மேஜையில் எழுதி வைத்திருந்ததை போலீசார் கண்டறிந்துள்ளனர். ஆனால், அவன் இறப்பிற்கு முன்பாக எழுதி வைத்திருந்த கடிதத்தை மட்டும் போலீஸ் இன்ஸ்பெக்டர் மறைத்து விட்டார். மாணவனை அடக்கம் செய்யும் வரையிலும் போலீசார் அந்த லெட்டரை காண்பிக்கவே இல்லை. பின்னர் பொதுமக்கள் போராட்டத்திற்கு பிறகே போலீசார் லெட்டரை கொண்டு வந்து காட்டினர். அதில் விவரங்களை மாணவன் தெளிவாக எழுதி வைத்துள்ளான். இது குறித்து காவல்துறையினர் முறையாக விசாரணை செய்யவில்லை என்பதால் இன்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளோம். அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர். இருந்தும் பள்ளி முதல்வர் இன்னமும் அந்த பள்ளியிலே பணியாற்றி கொண்டுள்ளார். பள்ளி நிர்வாகம் சார்பில் தொடர்ந்து பேச்சுவார்தைக்கு வந்து கொண்டுள்ளனர். மாணவனின் இறப்பிற்கு காரணமானவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும். அந்த பள்ளியால் மாணவர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது என தெரிவித்தனர்.
பேட்டி : தற்கொலை செய்து கொண்ட பன்னிரண்டாம் வகுப்பு மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள்













