ஒப்பந்த முறையைக் கைவிடக் கோரி செவிலியர்கள் தொடர் போராட்டம்: சென்னையில் செப். 30-ல் அடையாள உண்ணாவிரதம் அறிவிப்பு: நாகையில் தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் மாவட்டத் தலைவர் பேட்டி
பேட்டி:
ஜெயபாரதி தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் மாவட்ட தலைவர்
ராம்குமார் மாநில துணை செயலாளர்
அரசு மருத்துவமனைகளில் செவிலியர் பணியிடங்களை ஒப்பந்த முறையில் நிரப்பும் முடிவைக் கைவிடக் கோரியும், தேர்தல் வாக்குறுதிப்படி தற்காலிக ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தியும் வரும் செப்டம்பர் 30 அன்று சென்னையில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படவுள்ளதாக தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்க மாவட்ட தலைவர் ஜெயபாரதி.
தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம், மாநிலத் தலைவர் கு. சசிகலா தலைமையில் காணொலி வாயிலாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் தற்காலிக ஒப்பந்த முறையில் செவிலியர்களை நியமிக்கும் அரசின் முடிவைக் கைவிட வேண்டும் எனவும், புதிதாகத் தொடங்கப்பட உள்ள 6 செவிலியர் கல்லூரிகளில் ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்துப் பணியிடங்களையும் ஒப்பந்த முறையில் நிரப்பும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. மேலும், செவிலியர் பணியிடங்களைக் குறைக்கும் வகையிலான பணி நிரவல் அரசாணையைத் திரும்பப் பெற்று, தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டவாறு மருத்துவத் துறையில் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் அனைத்துத் தரப்பு ஊழியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
செப்டம்பர் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் செவிலியர்கள் மற்றும் மாணவர்களைச் சந்தித்து பிரச்சாரம் மேற்கொள்வதோடு, கருப்புப் பட்டை அணிந்து பணிபுரிந்து முதலமைச்சருக்கு மின்னஞ்சல் வழியே கோரிக்கை மனு அனுப்பவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, செப்டம்பர் 30 அன்று மாநிலத் தலைநகரான சென்னையில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் எனவும், அரசு இதற்குச் செவிசாய்க்காத பட்சத்தில் மாநிலச் செயற்குழுவைக் கூட்டி அடுத்தகட்டமாகத் தீவிரப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது













