கன்னியாகுமரி மாவட்டம் அரசு ரப்பர் தோட்ட தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை அரசு ரப்பர் கழகம் நிறைவேற்றப்படாத நிலையில் அரசு ரப்பர் கழக அதிகாரிகளின் செயல்பாட்டை தமிழக அரசுக்கு கவனத்திற்கு கொண்டு செல்ல ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் தோவாளை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆதார் ரேஷன் மற்றும் வாக்காளர் ஆகிய அடிப்படை ஆவணங்களை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டின் மொத்த ரப்பர் மற்றும் லேடெக்ஸ் (Latex – ரப்பர் பால்) உற்பத்தியில் கன்னியாகுமரி மாவட்டம் முதலிடம் வகிக்கிறது. இ மாவட்டத்தில் விளவங்கோடு, கல்குளம் மற்றும் தோவாளை ஆகிய தாலுகாக்களில் ரப்பர் தோட்டங்கள் பரவலாகக் காணப்படுகின்றன.இம்மாவட்டத்தில் பல்லாயிரக்கணக்கான ஹெக்டேர் பரப்பளவில் தனியார் மற்றும் அரசுத் துறை ரப்பர் தோட்டங்கள் அமைந்துள்ளன. ரப்பர் பால் வெட்டுதல், பதப்படுத்துதல் போன்ற தொழில்கள் இங்குள்ள பல கிராம மக்களுக்கு முக்கிய வேலைவாய்ப்பை வழங்குகின்றன. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்ட அரசு ரப்பர் தோட்ட தொழிலாளர்களுக்கு அரசு விதிமுறைப்படி ஊதிய உயர்வு வழங்காமல் கடந்த 9 மாத காலமாக காலம் கடத்தி வருவதுடன் ஊதிய உயர்வுக்காக கடந்த 10 நாட்களாக மாவட்டத்திலுள்ள 4 அரசு ரப்பர் கோட்டை மேலாளர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வரும் தொழிலாளர்களின் நிலைப்பாட்டையும் கண்டுகொள்ளாத அரசு ரப்பர் கழக அதிகாரிகளின் செயல்பாட்டை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் இன்று பூதப்பாண்டி பகுதியில் அமைந்துள்ள தோவாளை வட்டாட்சியர் அலுவலகத்தில் ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் தங்களது ஆதார் அட்டை ரேஷன் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டை ஆகிய அடிப்படை ஆவணங்களை தோவாளை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் சுமார் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தோவாளை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சுமார் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் திரண்டதால் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து அரசு ரப்பர் கழக அதிகாரிகளின் செயல்பாட்டை கண்டித்து தொழிலாளர்கள் கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.













