மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர் தன்னிடம் பயிற்சி பெறும் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து, அதை வீடியோ பதிவு செய்து மிரட்டுவதாக, பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார்:-
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா செம்பதனிருப்பு கிராமத்தைச் சேர்ந்த மோகன் என்பவர் வழக்கறிஞர் சங்கமித்திரன் உள்ளிட்ட சிலருடன் மாவட்ட ஆட்சியரகத்துக்கு வந்து புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், சீர்காழியில் ஓட்டுநர் பயிற்சி பள்ளி நடத்திவரும் உரிமையாளர் ஒருவர், தன்னிடம் பயிற்சி பெற வரும் குடும்ப பெண்கள், இளம் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து, அதை வீடியோ பதிவு செய்து வைத்துக்கொண்டு, அதை வைத்து பெண்களை மிரட்டி முக்கிய பிரமுகர்களுக்கு சப்ளை செய்து வருவதாகவும் பகீர் குற்றச்சாட்டை புகாராக தெரிவித்துள்ளார்.
பயிற்சி பள்ளி உரிமையாளர் தன்னிடம் பயிற்சி எடுக்க வருகின்ற குடும்ப பெண்கள், இளம் பெண்களிடம் அவர்களது செல்போன் எண்ணுக்கு ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியும், பயிற்சி கொடுக்கும் போது பாலியல் சீண்டல்களை செய்தும், சில பெண்களை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு அவர்களுக்கு தொடர் பாலியல் தொல்லைகள் கொடுத்து வருவதாகவும், பாலமுருகனால் பாதிக்கப்பட்ட சில பெண்கள் தற்கொலைக்கு முயற்சித்து இருக்கிறார்கள் என்றும் இந்த விவகாரம் குறித்து வெளியில் சொல்ல பாதிக்கப்பட்ட பெண்கள் பயப்படுவதால், சிங்கப்பெண் அதிரடிப்படையினர் விசாரித்து உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வரவேண்டும் என்றும் தனது உறவினர் பெண் ஒருவர் இதில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மோகன் தெரிவித்துள்ளார்.













