ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை என்ற துறையின் பெயரை “சமூக நீதித்துறை” என மாற்றி வெளியிடப்பட்டுள்ள அரசாணையை உடனடியாக திரும்பப் பெற்று, முந்தைய பெயரிலேயே தொடர வேண்டும் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் புரட்சி பாரதம் கட்சியினர் மனு.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், புரட்சி பாரதம் கட்சி சார்பில் மாநில செய்தித் தொடர்பாளர் பூவை ஆறு தலைமையில் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து மனு அளித்தனர்.
காவல்துறையினர் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூட்டமாக வந்தவர்களை தடுத்து நிறுத்தி, கட்சியின் சார்பில் 7 பேரை மட்டும் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளிக்க அனுமதித்தனர்.
அந்த மனுவில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை என்ற துறையின் பெயரை “சமூக நீதித்துறை” என மாற்றி வெளியிடப்பட்டுள்ள அரசாணையை உடனடியாக திரும்பப் பெற்று, முந்தைய பெயரிலேயே தொடர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
மேலும், இந்த பெயர் மாற்றம் பட்டியல் இன மக்களின் இடஒதுக்கீடு, கல்வி மற்றும் நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட உரிமைகளில் எதிர்காலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாகவும், எனவே தமிழக அரசு இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.













