திருவள்ளூர் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து: அரசு பேருந்து ஓட்டுநர் உயிரிழப்பு:
திருவள்ளூர் அடுத்த பூண்டி கிராமத்தைச் சார்ந்தவர் தேவராஜ். 55 வயதான இவர் தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார். தற்பொழுது ஊத்துக்கோட்டை பணிமனையில் திருவள்ளூரில் இருந்து சூலூர்பேட்டை வரை இயக்கக்கூடிய தடம் 165 என்ற பேருந்து ஓட்டுனராக உள்ள தேவராஜ் நேற்று இரவு பணி முடிந்து ஊத்துக்கோட்டை பணிமனையிலேயே படுத்து உறங்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து காலை ஊத்துக்கோட்டை பேருந்து பணிமனையில் இருந்து தனது வீட்டிற்கு பூண்டி நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது திருவள்ளூரில் இருந்து சிமெண்ட் ஏற்றிக்கொண்டு ஊத்துக்கோட்டை நோக்கி வந்து கொண்டிருந்தபோது மயிலாப்பூர் அருகே தேவராஜ் இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அரசு பேருந்து ஓட்டுனர் தேவராஜ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பென்னாலூர்பேட்டை காவல் நிலைய போலீசார் தேவராஜின் உடலை மீட்டு திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.














