குத்தாலம் அருகே மின்சார வாரியத்தின் எரிவாயு மின் நிலையத்தில் தற்காலிக பணியாளர்கள் வேலை நிறுத்தம் மற்றும் காத்திருப்பு போராட்டம், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து நடைபெற்றது. திருவாரூர் , மயிலாடுதுறை மாவட்டங்களில் மின்சார விநியோகம் பாதிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது:-
தமிழ்நாடு மின் உற்பத்தி கழகத்திற்கு சொந்தமான குத்தாலம் எரிவாயு சூழலி மின்நிலையம் மருத்தூரில் அமைந்துள்ளது. இங்கு 101 மெகாவாட் மின்சாரம் எரிவாயு மற்றும் நீராவி மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம், திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தில் ஐந்து துணை மின் நிலையங்கள் இந்த மின் நிலையம் மூலமாக மின்சாரத்தை பெறுகின்றன. இந்த மின் நிலையத்தில் 60க்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்கள் கடந்த 22 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்றனர் இவர்களுக்கு குறைந்தபட்சம் 6 ஆயிரம் முதல் 12 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே சம்பளம் வழங்கப்படுகிறது. 2021 தேர்தலின் பொழுது திமுக ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வதாக அறிவித்திருந்தது. ஆனால் வாக்குறுதியை நிறைவேற்றாத நிலையில் தங்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டியும், ஊதியத்தை உயர்த்தி வழங்க வலியுறுத்தியும் ஒப்பந்த தொழிலாளர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம் மற்றும் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக மின் உற்பத்தி பணிகள் குறைந்த அளவிலான நிரந்தர பணியாளர்களை கொண்டு மேற்கொள்ளப்படுகிறது. போராட்டம் தொடரும் என்றால் மின் உற்பத்தி பாதிக்கப்படும் இதன் காரணமாக கும்பகோணம் மற்றும் திருவாரூர் மாவட்டத்தில் ஒரு சில பகுதிகள் மயிலாடுதுறை மாவட்டத்தில் மேற்கு புறப்பகுதி ஆகியவற்றில் மின் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று ஊழியர்கள் எச்சரித்துள்ளனர்.














