திருவள்ளூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாலைநேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் மாலைநேர தர்ணா போராட்டம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெய்கர்பிரபு தலைமையில் நடைபெற்றது. இந்த தர்ணா போராட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும், கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் உடன் வழங்கிட வேண்டும், தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்படும் 10 சதவீதம் பங்களிப்பை இரத்து செய்திட வேண்டும், வருவாய்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், கருணை பணிநியமன உச்சவரம்பை 25 சதவீதமாக நிர்ணயம் செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்துறையை சேர்ந்த அலுவலர்கள், ஊழியர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் கோரிக்கை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.














