ரேக்ளா பந்தயத்தில் போட்டியாளர்களுக்கு மத்தியில் தனியாக ஓடிய குதிரை- திருவாரூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.
திருவாரூரில் காணும் பொங்கலை முன்னிட்டு ஆண்டுதோறும் ஆரூரான் விளையாட்டுக் கழகம் சார்பில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இதன் தொடர்ச்சியாக இன்று 41-வது ஆண்டாக விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில் குதிரை ரேக்ளா போட்டியில் பெரிய குதிரை, நடு குதிரை, சிறிய குதிரை என மூன்று பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டது. தெற்கு வீதி நகராட்சிக்கு எதிரில் துவங்கிய ரேக்ளா பந்தயம் கீழ வீதி, வடக்கு வீதி, மேலவீதி வழியாக தெற்கு வீதி வரை மூன்று சுற்றுகளாக குதிரை ரேக்ளா பந்தயம் நடைபெற்றது.
இந்த குதிரை ரேக்ளா பந்தயத்தை காண்பதற்காக திருவாரூர் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் நான்கு வீதிகளிலும் சூழ்ந்து ரேக்ளா பந்தயத்தை உற்சாகமாக கண்டுகொண்டிருந்தனர். கீழவீதி பகுதியில் வேடிக்கை பார்த்துக் கொண்டிந்த ஒருவர் மீது குதிரை வண்டி எதிர்பாராத விதமாக மோதியதில் குதிரை தனியாகவும் வண்டி தனியாகவும் பிரிந்தது. அப்போது அங்கே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நபரும், குதிரை வண்டி ஓட்டி வந்தவரும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். வேடிக்கை பார்த்த நபரை உடனடியாக அருகில் இருந்த காவலர்களும் மற்ற பொது மக்களும் காப்பாற்றிய நிலையில் குதிரை ஓட்டி வந்த நபர் சுய நினைவின்றி அசையாமல் அப்படியே சாலையில் கிடந்தார். குதிரை பந்தயத்தில் குதிரை ஓட்டி வந்தவரை கீழே தள்ளிவிட்ட குதிரை தனியாக இரண்டு கிலோ மீட்டர் தூரம் ஓடி எல்லையை அடைந்தது குறிப்பிடத்தக்கது.
ரேக்ளா ரேஸில் தன்னை வளர்த்து, பயிற்சி செய்து, பந்தயத்தில் ஒட்டி வந்த நபரை, கீழே தள்ளிவிட்டு தனியாக ஓடிய குதிரையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது














