கடந்த செம்டம்பர் மாதம் நடந்த இந்த சம்பவத்தில், கரூரில் வைத்து உள்ளூர் நிர்வாகிகள், வேன் ஓட்டுநர், கடைக்காரர்கள் உள்ளிட்டோரிடம் பொதுமக்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக, கடந்த மாதம் 29, 30, 31 ஆகிய தேதிதகளில் த.வெ.க நிர்வாகிகள் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார், கரூர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரை, சிபிஐ டெல்லிக்கு அழைத்து விசாரித்தது.
இதையடுத்து, சம்பவத்திற்கு மூலகாரணமான நடிகர் விஜய்யை டெல்லிக்கு அழைத்தது. இதற்காக காலை சென்னையில் இருந்து சிறப்பு விமானத்தில் சென்ற அவர், நேரடியாக சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.
இதை முன்னிட்டு, அதைச் சுற்றியுள்ள சாலைகளில் பலத்த போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காலை முதல் அவரிடம் தொடர் விசாரணை நடந்து வருகிறது. அப்போது, கூட்ட நெரிசல் தொடர்பான பல்வேறு கேள்விகள் அடங்கிய பட்டியலை வழங்கிய அதிகாரிகள், அவை அனைத்திற்கும் எழுத்துப்பூர்வப் பதிலைப் பெற்று வருகிறார்கள். அவர் சொல்வதை எழுதுவதற்கு ஒரு சுருக்கெழுத்தரை சிபிஐ நியமித்துள்ளது. மேலும், விஜய்க்கு உதவியாக வழக்கறிஞரையும் அனுமதித்துள்ளது. அதேசமயம், வேறு யாரும் அவரை அணுக முடியாதபடி தனிமையில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பிரசாரத்திற்கு தாமதமாகச் சென்றது ஏன், கூட்ட நெரிசல் ஏற்பட்டது எப்போது தெரியும், காவல்துறை தடியடி நடத்தியது, கூட்டத்தைவிட்டு வெளியேறிது எப்போது என்பது உள்ளிட்ட கேள்விகள் கேட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மதிய உணவை அலுவலத்திற்குள்ளேயே முடிந்துகொண்ட விஜய்யிடம் தற்போது வரை விசாரணை தொடர்கிறது.
இந்த விசாரணைக்கு இடையே, கரூர் சம்பவம் நடைபெற்றபோது உளவுத் துறை அதிகாரியாக இருந்து, தற்போது ஆயுதப்படை டிஜிபியாக இடமாற்றம் செய்யப்பட்ட டேவிட்சன் தேவாசீர்வாதம் சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தட்டு அனுப்பப்பட்டார். அவருடன், திருச்சி மண்டல ஐ.ஜி.யாக இருந்த நிர்மல் குமார் ஜோஷியும் சி.பி.ஐ. அலுவலகத்தில் நேரில் ஆஜரானார்.
இந்நிலையில், டெல்லிக்கு விசாரணைக்காக வந்துள்ள நடிகர் விஜய்யை பார்க்க அவரது ரசிகர்களும், தவெக தொண்டர்களும் சிபிஐ அலுவலகம் செல்லும் சாலையில் திரளாக கூடியிருந்தனர்.

















