திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் முக்கிய நுழைவுவாயிலாகவும், தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியாகவும் விளங்கும் திருவெறும்பூர் பகுதி மக்களின் பல தசாப்த கால கோரிக்கையை ஏற்று, அங்கு நவீன வசதிகளுடன் கூடிய புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான பணிகள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளன. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில், 6-வது மாநில நிதி ஆணையத்தின் (2025-26) கீழ் இதற்காக 6.10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று (10.01.2026) நடைபெற்றது. தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் இணைந்து இப்பணிகளைத் தொடங்கி வைத்தனர்.
புதிதாக அமையவுள்ள இப்பேருந்து நிலையம் நவீன உட்கட்டமைப்பு வசதிகளுடன் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 10 பேருந்து நிறுத்தங்கள் (Bus Bays), பயணிகளின் வசதிக்காக 16 வணிகக் கடைகள், 24 இருக்கை பெஞ்சுகள் ஆகியவை அமைக்கப்படவுள்ளன. பாதுகாப்பு அம்சமாக 24 நவீன CCTV கேமராக்கள் மற்றும் 20 தீயணைப்பு கருவிகள் பொருத்தப்பட உள்ளன. மேலும், போக்குவரத்துத் துறை மற்றும் காவல்துறையினருக்காகத் தனித்தனி அறைகள், நேரம் காப்பாளர் அறை, தாய்மார்கள் பாலூட்டும் அறை போன்ற வசதிகளும் இதில் இடம்பெறுகின்றன.
சுயாதீனமான நீர் வசதிக்காக ஆழ்துளைக் கிணறு மற்றும் 250 லிட்டர் கொள்ளளவு கொண்ட RO குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் நிறுவப்படவுள்ளது. பேருந்து நிலையத்தின் தரைத்தளம் 2430 சதுர மீட்டர் பரப்பளவில் வலிமையான சிமெண்ட் கான்கிரீட் சாலையாகவும், வாகன நிறுத்துமிடம் 349 சதுர மீட்டர் பரப்பளவில் பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டும் உருவாக்கப்பட உள்ளது. இந்தப் புதிய பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வரும்போது, தஞ்சாவூர் மற்றும் திருச்சி மார்க்கமாகச் செல்லும் ஆயிரக்கணக்கான பயணிகள் மற்றும் தொழிற்சாலை பணியாளர்களின் போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் வே.சரவணன், மாநகராட்சி மேயர் அன்பழகன், திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் மாநகராட்சி ஆணையர் லி.மதுபாலன், நகரப் பொறியாளர் சிவபாதம், நிர்வாகப் பொறியாளர் பாலசுப்ரமணியன், துணை மேயர் ஜி.திவ்யா, மண்டலத் தலைவர் மு.மதிவாணன், மாவட்ட நகர் ஊரமைப்பு குழு உறுப்பினர் வைரமணி, மாமன்ற உறுப்பினர் எஸ்.சிவக்குமார் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டனர். இந்தத் திட்டம் திருவெறும்பூர் தொகுதியின் வளர்ச்சிக்கு ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என விழாவில் அமைச்சர்கள் பெருமிதத்துடன் தெரிவித்தனர்.
















