தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு மற்றும் திருத்தப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, மதுரை மாவட்டத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த டிசம்பர் 19-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த நிலையில், மதுரை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் ஆளுங்கட்சியின் தலையீட்டினால் வாக்காளர் பட்டியலில் பெரும் குளறுபடிகள் நடந்துள்ளதாக அண்ணா திமுக சார்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக, அதிமுக மருத்துவ அணி இணைச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் பா.சரவணன், மதுரை வடக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் மாநகராட்சி மண்டலம் 2-இன் உதவி ஆணையாளருமான ரவிக்குமாரிடம் நேற்று அதிரடியாகப் புகார் மனு ஒன்றை அளித்தார்.
அந்தப் புகார் மனுவில், மதுரை வடக்கு தொகுதிக்கு உட்பட்ட பாகம் எண் 98-இல் உள்ள வரைவுப் பட்டியலில் திட்டமிட்டு முறைகேடுகள் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, அந்தப் பாகத்தில் உள்ள 844 வாக்காளர்களில், மரணமடைந்த 29 நபர்களின் பெயர்கள் நீக்கப்படாமல் அப்படியே இடம்பெற்றுள்ளன. மேலும், நிரந்தரமாகப் பகுதியை விட்டு இடம்பெயர்ந்து சென்ற 12 பேர் மற்றும் ஒரு இரட்டைப் பதிவு என மொத்தம் 42 பெயர்கள் முறைகேடாகச் சேர்க்கப்பட்டுள்ளன. இது குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் பா.சரவணன், “ஆளுங்கட்சியினரின் தூண்டுதலின் பெயரில், சில வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) திட்டமிட்டு இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர். முறையான கள ஆய்வு நடத்தாமல் வெளியிடப்பட்டுள்ள இந்தப் பட்டியல் ஜனநாயகத்திற்கு எதிரானது. எனவே, இந்தப் பெயர்களை உடனடியாக நீக்குவதோடு, தவறிழைத்த அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என வலியுறுத்தினார்.
மேலும் அவர் பேசுகையில், “தமிழகத்தில் நிலவும் எதிர்ப்பு அலையைச் சமாளிக்க முடியாமல், அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தி இது போன்ற குறுக்கு வழி மோசடிகள் மூலம் தேர்தலில் வெற்றி பெற திமுக அரசு முயற்சிக்கிறது. ஆனால், திமுக அரசின் செயல்பாடுகளால் விரக்தியில் உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மகளிர் மற்றும் இளைஞர்கள் இந்தத் தேர்தலில் ஆளுங்கட்சிக்குத் தகுந்த பாடம் புகட்டுவது உறுதி,” என ஆவேசமாகத் தெரிவித்தார். இந்தச் சந்திப்பின் போது அதிமுக மருத்துவ அணி நிர்வாகிகள் மற்றும் ஏராளமான கட்சித் தொண்டர்கள் உடனிருந்தனர். தேர்தல் ஆணையம் தலையிட்டு மதுரை மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியலை மறுஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தற்போது மதுரையில் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.













