கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், ஜனவரி 12-ந்தேதி டெல்லியில் உள்ள அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு, சிபிஐ சம்மன் அனுப்பி இருக்கிறது.
கரூரில் கடந்த செப்டம்பர் 27-ந்தேதி, த.வெ.க தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில், நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. வழக்கு தொடர்பாக த.வெ.க நிர்வாகிகள் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார், மதியழகன், விஜயின் பிரச்சார வாகன ஓட்டுனர் அஜித் ஆகிய 5 பேரும், டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் கடந்த வாரம் ஆஜரானார்கள். அவர்களிடம் 3 நாட்கள் விசாரணை நடத்தப்பட்டது. இதேபோல், கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜோஸ் தங்கையாவும், விசாரணைக்கு ஆஜராகி இருந்தார்.
இந்த சூழலில், அடுத்தகட்டமாக த.வெ.க தலைவர் விஜயிடம் விசாரணை நடத்த, சிபிஐ முடிவு செய்திருக்கிறது. 12-ந்தேதி டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு வருமாறு, சிபிஐ தரப்பில் விஜய்க்கு சம்மன் அனுப்ப பட்டுள்ளது.

















