தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் நெருங்கி வரும் சூழலில், ஆளுங்கட்சியின் சமீபத்திய அறிவிப்புகளை “தேர்தல் பயத்தின் வெளிப்பாடு” என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கடுமையாகச் சாடியுள்ளார். மதுரையில் நடைபெற்ற ஆருத்ரா யாக நிகழ்வில் பங்கேற்ற அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், வரும் 2026-ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமைவது உறுதி எனத் தெரிவித்தார்.
ஜனவரி 20-ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கவுள்ள சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் குறித்துப் பேசிய அவர், “இந்த திமுக அரசால் தற்போது இடைக்கால பட்ஜெட்டை மட்டுமே தாக்கல் செய்ய முடியும். முழுமையான பட்ஜெட்டைச் சமர்ப்பிக்கும் தார்மீக உரிமையை அவர்கள் இழந்துவிட்டனர். வரும் 2026-27 ஆம் ஆண்டிற்கான முழுமையான மக்கள் நல நிதிநிலை அறிக்கையை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான மக்களாட்சி அரசுதான் தாக்கல் செய்யும்” என்றார். மேலும், கடந்த ஆண்டு பொங்கல் பரிசு வழங்காத நிலையில், தற்போது தேர்தல் நெருங்குவதால் பொங்கல் பரிசுத் தொகையையும், நீண்டகாலமாக நிலுவையில் இருந்த மாணவர்களுக்கான மடிக்கணினி வழங்கும் திட்டத்தையும் முதல்வர் அறிவித்துள்ளதாகக் குற்றம் சாட்டினார்.
தமிழகத்தின் தற்போதைய நிலையை “குப்பை மாநகரம்” மற்றும் “குப்பை மாநிலம்” என விமர்சித்த அவர், “எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தூய்மையான கோவில் என விருது பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள், இன்று கழிவுநீரை மிதித்துக்கொண்டு செல்லும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து, போதைப்பொருட்கள் ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் நுழையும் அளவிற்குப் புழக்கம் அதிகரித்துள்ளது” என வேதனை தெரிவித்தார். மின்சாரக் கட்டணம், சொத்து வரி, பால் விலை மற்றும் பத்திரப்பதிவு கட்டண உயர்வுகளால் பொதுமக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் தேர்தல் ஜுரம் காரணமாகவே புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருவதாகவும், ஆனால் மக்கள் தீர்ப்பே இறுதியானது என்றும் அவர் குறிப்பிட்டார். “திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், அதிகாரத்தையும் காவல்துறையையும் வைத்துத் தேர்தலில் வென்றுவிடலாம் என நினைக்கிறது. ஆனால், அதிமுகவின் 2 கோடி தொண்டர்களும் எடப்பாடியார் காட்டும் திசையில் விசுவாசத்துடன் மக்கள் பணியாற்றி வருகின்றனர்; 2026-ல் திமுகவிற்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்” என ஆர்.பி. உதயகுமார் தனது பேட்டியில் ஆவேசமாகத் தெரிவித்தார்.

















