கோவை மாநகரின் மையப்பகுதியான மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள பூ மார்க்கெட் பகுதி, எப்போதும் மக்கள் நடமாட்டம் மிகுந்த வணிக மையமாகத் திகழ்கிறது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் சிறு வியாபாரிகள் நாள்தோறும் வந்து செல்லும் இந்த வழித்தடத்தில், சாலையை ஆக்கிரமித்துக் கடைகள் போடப்பட்டிருந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வந்தது. இருசக்கர வாகனங்களை நிறுத்தக் கூட இடமில்லாமல், பிரதான சாலையில் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் அவலநிலை குறித்து நமது நாளிதழில் படங்களுடன் விரிவான செய்தி வெளியிடப்பட்டது. இதன் விளைவாக, கடந்த 12-ஆம் தேதி மாநகராட்சி நகரமைப்புப் பிரிவினர் காவல்துறையினரின் உதவியுடன் அதிரடி நடவடிக்கையில் இறங்கி, ஆக்கிரமிப்பு கடைகளை அப்புறப்படுத்தினர். அப்போது சுமார் 27 அடி அகலமுள்ள சாலை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கப்பட்டு, போக்குவரத்து தடையின்றி சீரமைக்கப்பட்டது.
ஆனால், இந்த மாற்றமும் நிம்மதியும் வெறும் இரண்டு வாரங்கள் கூட நீடிக்கவில்லை. அதிகாரிகளின் கண்காணிப்பு சற்றுத் தளர்ந்ததையே வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்ட ஆக்கிரமிப்பாளர்கள், மீண்டும் சாலையை ஆக்கிரமித்துத் தங்களது கடைகளை விரிவுபடுத்தத் தொடங்கிவிட்டனர். இதனால் மீட்கப்பட்ட சாலையின் அகலம் மீண்டும் சுருங்கி, பழையபடி போக்குவரத்து நெரிசல் தலைதூக்கியுள்ளது. மாநகராட்சி நிர்வாகம் இவ்வளவு சிரமப்பட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றியும், அதனை மதிக்காமல் மீண்டும் மீண்டும் கடை போடும் வியாபாரிகள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகியுள்ளது. ஆக்கிரமிப்பிலுள்ள பொருட்களைப் பறிமுதல் செய்வதோடு, தரையில் பரப்பப்படும் மரத்திலான சிலாப்களையும் அப்புறப்படுத்த வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
குறிப்பாக, மாநகராட்சியில் முறையாகக் கடைகளை ஒதுக்கீடு பெற்ற வியாபாரிகளே சாலையை ஆக்கிரமித்து உபரி கடைகளை வைத்திருந்தால், அவர்களுக்கு வழங்கப்பட்ட கடை ஒதுக்கீட்டை ரத்து செய்வதோடு, உச்சபட்ச அபராதமும் விதிக்க வேண்டும். இத்தகைய கடுமையான தண்டனைகள் மட்டுமே எதிர்காலத்தில் ஆக்கிரமிப்புகள் மீண்டும் உருவாகாமல் தடுக்கும் அரணாக அமையும். ஆக்கிரமிப்புகள் மீண்டும் உருவாவது வெளிப்படையாகத் தெரிந்தும், நகரமைப்புப் பிரிவினர் மெத்தனமாக இருப்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மாநகராட்சி நகரமைப்பு அலுவலர் ராஜசேகரனிடம் கேட்டபோது, “பூ மார்க்கெட் பகுதியில் நிலவும் சூழல் குறித்து மீண்டும் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, ஆக்கிரமிப்புகள் அனைத்தும் பாரபட்சமின்றி அகற்றப்படும்” என உறுதி அளித்துள்ளார்.

















