மதுரை மாநகரின் சட்டம் ஒழுங்கு பராமரிப்பு மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த 2025-ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் வெளியிட்டார். அதில், கடந்த 2024-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2025-ஆம் ஆண்டில் மதுரை மாநகரில் குற்றச் சம்பவங்கள் பெருமளவு குறைந்துள்ளதாக அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார். குறிப்பாக, வழிப்பறி, போதைப்பொருள் விற்பனை மற்றும் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் கொடுங்குற்றங்களில் ஈடுபட்ட 87 சமூக விரோதிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். காவல்துறையினரின் தொடர் ரோந்து மற்றும் தீவிர கண்காணிப்புப் பணிகளால், காய வழக்குகள் 43 சதவீதமும், கொலை முயற்சி வழக்குகள் 58 சதவீதமும் கணிசமாகக் குறைந்துள்ளன. மேலும், நீண்ட காலமாகத் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளைக் கண்டறிந்து, நீதிமன்றம் மூலம் ‘பிடிவாரண்ட்’ பிறப்பிக்கப்பட்டு அவர்கள் ஆஜர்ப்படுத்தப்பட்டதால், நிலுவையில் இருந்த பல முக்கிய வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது.
குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தருவதில் மதுரை மாநகர காவல் துறை காட்டிய தீவிரத்தன்மையால், 11 முக்கிய வழக்குகளில் தொடர்புடைய 25 ரவுடிகளுக்கு 10 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறை தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது. சொத்துக் குற்றங்களைப் பொறுத்தவரை, திருட்டு வழக்குகளில் தொடர்புடைய சுமார் 3 கோடியே 93 லட்சத்து 75 ஆயிரத்து 793 ரூபாய் மதிப்புள்ள நகைகள் மற்றும் பொருட்கள் மீட்கப்பட்டு, நீதிமன்ற நடைமுறைகளுக்குப் பின் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அதேபோல், வழிப்பறிச் சம்பவங்கள் முந்தைய ஆண்டை விட 74 சதவீதம் வரை குறைந்துள்ள நிலையில், காணாமல் போன மற்றும் திருடப்பட்ட 1,132 கைபேசிகள் (மதிப்பு ரூ. 1.69 கோடி) கண்டுபிடிக்கப்பட்டு அவற்றின் உரிமையாளர்களிடம் வழங்கப்பட்டுள்ளன.
போக்குவரத்து மேலாண்மையைப் பொறுத்தவரை, சாலை விபத்துகளையும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் தடுக்கக் காவல் துறை மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. போக்குவரத்து விதிமுறைகளை மீறிய வாகன ஓட்டிகள் மீது 5 லட்சத்து 7 ஆயிரத்து 263 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஹெல்மெட் அணியாமல் செல்வது, அதிவேகப் பயணம் மற்றும் சிக்னல் மீறல் போன்ற செயல்களைத் தடுக்க நவீன கேமராக்கள் மூலம் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மதுரை மாநகரை ஒரு பாதுகாப்பான இடமாக மாற்றுவதற்குப் பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றும், 2026-ஆம் ஆண்டில் குற்றமில்லா மாநகராக மதுரையை மாற்றத் தொடர்ந்து பாடுபடுவோம் என்றும் ஆணையர் லோகநாதன் தனது அறிக்கையில் உறுதிப்படத் தெரிவித்தார்.

















