திருநெல்வேலி மாவட்டம் ராமையன்பட்டி அருகே அமைந்துள்ள கம்மாளங்குளம் கிராமத்தில், கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் 8-வது சுற்று கால் மற்றும் வாய் நோய் எனப்படும் ‘கோமாரி நோய்’ தடுப்பூசி முகாம் இன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மரு. இரா. சுகுமார் தலைமை தாங்கி, கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் மரு. வீ. சங்கரநாராயணன் முன்னிலையில் இம்முகாமினைத் தொடங்கி வைத்தார். கால்நடைகளைத் தாக்கும் மிகக் கொடிய நோய்களில் ஒன்றாகக் கருதப்படும் இக்கோமாரி நோயைத் தமிழகத்திலிருந்து முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கில், அரசு இத்தகைய சிறப்பு முகாம்களை முன்னெடுத்து வருகிறது.
இந்த கோமாரி நோயானது வைரஸ் கிருமிகளால் பரவக்கூடியது. பாதிப்புக்குள்ளான மாடுகளிடம் இருந்து மற்ற ஆரோக்கியமான மாடுகளுக்கு நேரடியாகத் தொற்றும் தன்மை கொண்டது மட்டுமல்லாமல், தீவனம், தண்ணீர், காற்று மற்றும் மனிதர்கள் மூலமாகவும் மிக வேகமாகப் பரவும் அபாயம் கொண்டது. இந்நோய் பாதிப்பால் கறவை மாடுகளின் பால் உற்பத்தி பெருமளவு குறைவதுடன், அவற்றின் சினை பிடிக்கும் தன்மையும் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. விவசாயப் பணிகளில் ஈடுபடும் எருதுகளின் உழைக்கும் திறன் குறைவதோடு, போதிய நோய் எதிர்ப்புச் சக்தி இல்லாத இளம் கன்றுகளின் மரணத்திற்கும் இந்நோய் முக்கியக் காரணமாகிறது. இத்தகைய பெரும் பொருளாதார இழப்புகளைத் தவிர்க்கவும், கால்நடைகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் தடுப்பூசி ஒன்றே நிரந்தரத் தீர்வாகும்.
கம்மாளங்குளம் கிராமத்தில் இன்று நடைபெற்ற தொடக்க முகாமில் மட்டும் சுமார் 200 பசுக்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து கிராமங்களிலும் வரும் ஜனவரி 28, 2026 வரை இந்தத் தடுப்பூசிப் பணி தீவிரமாக நடைபெறவுள்ளது. மாவட்டத்தில் உள்ள மொத்தமுள்ள 1,41,800 மாடுகளுக்கும் அந்தந்தப் பகுதிகளில் உள்ள கால்நடை மருந்தகங்கள் மற்றும் கிளை நிலையங்கள் வழியாகத் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, கால்நடை வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி, தங்கள் கால்நடைகளுக்கு எவ்விதத் தொய்வுமின்றி தடுப்பூசி போட்டுக் கொண்டு நோய்ப் பாதிப்பிலிருந்து பாதுகாக்க வேண்டும் என ஆட்சியர் மரு. இரா. சுகுமார் அன்புடன் கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்வில் கால்நடை பராமரிப்புத் துறை துணை இயக்குநர் மரு. இராஜராஜேஸ்வரி, ராமையன்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் கு.டேவிட், உதவி இயக்குநர்கள் மரு. சுமதி, மரு. முருகன் ஆகியோர் பங்கேற்றனர். மேலும், ஆவின் நிறுவன உதவி பொது மேலாளர் மரு. சரவண முத்து, மேலாளர் மரு. சுந்தரம், கால்நடை உதவி மருத்துவர்கள் மரு. சத்திய பிரியா, மரு. சரண்யா, மரு. கோகுல், மரு. தினேஷ் மற்றும் கால்நடை ஆய்வாளர்கள், பராமரிப்பு உதவியாளர்கள் எனப் பல்துறை அதிகாரிகள் ஒருங்கினைந்து இப்பணியினை மேற்கொண்டனர்.

















